உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           கொடியணி தேருங் குதிரையும் யானையும்
           வடிவே லிளையரும் வல்விரைந் தோடி
     115    எய்கணை யியற்கை யியற்றமை யிரும்பிடி
           கையகம் புக்க தன்றியிவ் வையகத்
           தறத்தோடு புணர்ந்த துறைப்புன லாட்டத்
           தற்றமும் பிறவு மொற்றுவன னோக்கி
           வள்ளி மருங்கின் வயங்கிழைத் தழீஇ
     120    எள்ளி யிறந்த வின்னா மன்னனைப்
           பற்றுபு தம்மெனப் படையுறப் படுத்து
 
             (இதுவுமது)
         113 - 121: கொடி.........படுத்து
 
(பொழிப்புரை) "கொடியுயர்த்தப்பட்ட நந்தேர்ப்படையும் குதிரைப் படையும், யானைப் படையும், வடித்தவேல் முதலியன ஏந்திய காலாண் மறவரும் ஆகிய நாற்படையும், மிக மிக விரைந்தோடிச் சென்று, மறவனொருவன் எய்த கணைபோன்று விரைந்து செல்லும் பண்ணுறுத்தப்பட்ட நமது பெரிய பிடியாகிய பத்திராபதி அவ்வுதயணன் கையின்கண்ணதாகிய செவ்வியன்றியும், இவ்வுலகத்தே நல்லறச் செயலோடு சேர்ந்த இவ்விழாவின்கண் நாமெல்லாம் இப்பொய்கைத் துறையிலே நீராடுதலாலே நம்பாலுற்ற சோர்வையும் பிற சோர்வுகளையும் ஆராய்ந்து அறிந்து கொண்டு தகுந்த செவ்வியிஃதெனக் கருதி வள்ளிக்கொடி போலும் இடையையும் விளங்காநின்ற அணிகலன்களையும் உடைய நம் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு நம்மையெல்லாம் இகழ்ந்து தன்னூர் நோக்கி விரையா நின்ற இன்னாமை செய்யுமியல்புடைய நம் பகைவனாகிய அவ்வுதயணனைப் பற்றி வந்து எம்பாற் கொடுங்கோள்!" என்று கட்டளையிட்டுப் படைகளை எழுப்பி விடுத்து என்க.
 
(விளக்கம்) இயற்று - இயற்றுதல்; பண்ணமைத்த பிடி என்றவாறு. அற்றம் - சோர்வு. பிற என்றது படை மறவர் படைக்கல மெடாமை முதலிய சோர்வுகளை. எள்ளி - இகழ்ந்து. பற்றுபு - பற்றி. தம் - தாருங்கோள்.