உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           ஞாலந் தரும்பொரு ளியற்பட நாடிய
           சாலங் காயனைத் தலைக்கை யாக்கப்
           பல்பொருள் பொதிந்த பயந்தெரி பனுவற்
     125    பரதகன் றன்னொடு பயந்தீர் நண்பின்
           மந்திர மாக்களா மந்த ணாளரும்
           அகத்தாற் குழீஇய வவைய னாதலின்
           முகைத்தார் வேந்தற்கு முகத்தெழு பெருஞ்சினம்
           புனற்படு நெருப்பிற் பொம்மென வுரறி
     130    ஆறிய வண்ண மணிமுக நோக்கித்
           தெளிதகு கிளவி செவ்விதிற் கேட்ப
 
             (இதுவுமது)
         122 - 131: ஞாலம்..........கேட்ப
 
(பொழிப்புரை) இவ்வுலகம் மாந்தர்க்கு வழங்காநின்ற அறம் பொருள் இன்பம் வீடென்னும் நால்வகை உறுதிப்பொருளையும், அவற்றின் இயல்பெலாம் தோன்றுமாறு நன்கு ஆராய்ந்து தெளிந்த ''சாலங்காயன்'' என்னும் அறிஞனை, முதன்மையுடைய அமைச்சனாகக் கொண்டு மேலும் பல்வேறு பொருள்களையும் தம்மகத்தே கொண்ட பயன் தெரிதற்குக் கருவியாகிய நூல்களைக் கற்றுணர்ந்த (பரதகன்) என்னும் அமைச்சனோடும் கைம்மாறு கருதாத நண்பினையுடைய ஏனை அமைச்சர்களும் அந்தணரும் அகத்தே குழுமியிருக்கும் நல்லவையினையுடையனாதலின் அரும்புகளையுடைய மாலையணிந்த அப்பிரச்சோதன மன்னனது முகத்தே தோன்றிய பெரிய வெகுளியானது நீர் பெய்யப்பட்ட தீப்போன்று ஞெரேலென மிகுந்து படிப்படியாகத் தணியலாயிற்று. அங்ஙனம் மன்னன் சினந் தணிவுற்றமையை அவனது அழகிய முகத்தை நோக்கியே உணர்ந்துகொண்ட சாலங்காயன் தெளிவும் தகுதியுமுடைய தன் மொழிகளை மன்னவன் நன்கு கேட்டுணரும்படி (பின்வருமாறு கூறுகின்றான்) என்க.
 
(விளக்கம்) பொருள் - அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள். தலைக்கை - முதன்மை. பயம் - பயன். பனுவல் - நூல். பயந்தீர் நண்பு என்றது உறுவது சீர் தூக்காத மெய்ந்நண்பு என்றவாறு. மந்திரமாக்கள் - அமைச்சர். சான்றோர் அவையிலே நாளும் பயின்றமை அவன் சினம் தணிதற்கு ஏதுவாகக் காட்டிய அருமையுணரற்பாலது. தெளிதகு கிளவி : வினைத் தொகையடுக்கு.