உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
உளைவன
செய்த வுதயண
குமரனைத்
தளைவயி னகற்றலுங் கிளைவயிற்
பெயர்த்தலும்
ஆர மார்பவஃ தியாவரு மறிவர் 135
வருமுலை யாகத்து வணங்குகொடி
மருங்கில்
திருமக டன்வயிற் றெரிந்தனை
காணிற்
குலத்தினுங் குணத்தினு நலத்தகு
நண்பினும்
நிலத்தினி னின்னொடு நிகர்க்குந
னாதலின்
மேல்வகை விதியின் விழுமியோர் வகுத்த
140 பால்வகை மற்றிது பழிக்குந
ரில்லை
ஆறென வருளா யண்ணன்மற்
றதுநீ வேறென
வருளிய வேட்கை
யுண்டெனின்
முன்னிலை முயற்சியி னன்றி
மற்றினிப்
பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல்
145 திருவளர் மார்ப தெளிந்தனை
யாகென ஒருபே
ரமைச்ச னுள்விரித் துரைப்ப
|
|
(சாலங்காயன்
கூற்று) 132 - 146:
உளைவன..........உரைப்ப
|
|
(பொழிப்புரை) "முத்தாரம் புரளும்
மார்பினையுடைய வேந்தே! இப்பொழுது நாம் மனம் வருந்தக் காரணமான தீமையை
நமக்குச் செய்த அவ்வுதயண குமரனை நாம் சிறைக் கோட்டத்தினின்றும்
விடுவித்தமையும், நம் உறவினர் சூழலிலே புகுத்தியமையும் ஆகிய
நாம் அவன்வயிற் செய்த நன்மையை இவ்வுலகத்தே எல்லோரும் அறிகுவர்
அல்லரோ? எனவே செய்ந்நன்றி மறந்து அவன் நம்பாற் செய்த தீமை
நமக்கொரு பழியாகாது; அரசே! அது நிற்க, இனி, வளரா நின்ற
கொங்கைகளையுடைய மார்பினையும், வளையும் கொடி போன்ற இடையையுமுடைய அழகிய
நம் செல்வியாகிய வாசவதத்தையின் திறத்திலே வைத்து இச்செயலை ஆராய்ந்து
தெளிவாயாயின் அவ்வுதயணன்றானும், குலநலத்தானும் குண
நலத்தானும் நன்மைக்குத் தகுந்த நண்புடைமையானும் இப் பேருலகத்தே நின்னோடு
ஒப்பவனே ஆகலானும்; மேம்பாடுடைய முறைமையினையுடைய நூல்களிலே சான்றோர்
வகுத்த விதியோடிணங்கிய ஊழின் செயல் வகையே இச்செயலுமாகும். ஆகவே
இதனானும் நம்மைப் பழிப்போர் உலகிலில்லை கண்டாய்! ஆகவே இது
சான்றோர் சென்ற நெறியே என்று நினைந்தமைந்தருள்க! பெருமானே!
இங்ஙனமன்றி நீ அவன் செயலைப் பகைமைச் செயலென்றே வேறாகக்
கருதியமையாலே அவனைப் பற்றிக்கோடல் வேண்டும் என்னும் விருப்பம்
நினக்குண்டாயினும் இச்செயலை முன்னிறுத்திச் செய்யும் இவ்வகையாலன்றி
இனிக் காலமும் இடனும் தேர்ந்து பின்னர்ச் செய்யும் போர் முயற்சியினாலே
யாங்கள் அவனை நின் விருப்பப்படியே சிறை பற்றிக் கொணர்ந்து தருவேம்.
திருமகள் உறைகின்ற மார்பையுடையோய் ! நீ எம் மொழியைத் தெளிந்தருள்க
என்று ஒப்பற்ற முதலமைச்சனாகிய அச்சாலங்காயன் தனது கருத்தினை இவ்வாறு
நன்கு விரித்தோதா நிற்றலாலே என்க.
|
|
(விளக்கம்) அஃது
என்றது சாதியொருமை. நாம் நன்மை செய்தேம் அவன் தீமை செய்யின் அது நம்
பழியன்று என்று தெளிவித்தபடியாம். வாசவதத்தையை உதயணன்
கைப்பற்றிப்போன செயலை அவள் திறத்தே வைத்து ஆராயின் அச்செயல் அறச்
செயலே என்று தெளிவித்தபடியாம். மேல்வகை விழுமியோர் வகுத்த நூல்
விதியின்பால் வகை இது என மாறுக. விழுமியோர் - சான்றோர். ஆறென -
சான்றோர் சென்ற நெறியென்று. வேறு என - பகைமைச் செயலே என்று.
அமைச்சன் - சாலங்காயன். உள் - உள்ளம்;
கருத்து.
|