உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
         எறிநீர் வரைப்பி னெப்பொரு ளாயினும்
           என்னி னறிவோ ரில்லென மதிக்கும்
           மன்னருண் மன்னன் மனத்திற் றேறி
     150    இடத்தோ ளன்ன விடற்கருங் காதல்
           உரிமைத் தேவியர்க் கொருமீக் கூரிய
           பட்டத் தேவிக்குப் பட்டதை யெல்லாம்
           ஏனோ ருணர்த்துத னீக்கிக் கோமான்
           தானே யுணர்த்துந் தன்மைய னாகி
 
           (பிரச்சோதனன் செயல்)
            147 - 154: எறிநீர்..........ஆகி
 
(பொழிப்புரை) அலையெறியாநின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தின்பால் எந்தப் பொருளாயினும் என்னினும் காட்டில் அறிவோர் இல்லை என்று தன்னைத்தானே மதிக்குஞ் செருக்குடைய வேந்தருள் வைத்துத் தலைசிறந்த வேந்தனாகிய அப்பிரச்சோதனன் சாலங்காயன் அறிவுரைகளைக் கேட்டுத் தெளிந்து தனது இடது தோளைப் போன்று நீக்குதற்கரிய தன் தேவியருள் வைத்தும் ஒப்பில்லாதுயர்ந்த தன் பட்டத்துத் தேவிக்கு ஈண்டு நிகழ்ந்த இந்நிகழ்ச்சியெல்லாம் மற்றையோர் சென்று உணர்த்துதல் கூடாது என்று கருதி விலக்கி, அக்கோமான் தானே சென்றுணர்த்துதல் வேண்டும் என்னும் கருத்துடையனாகி யென்க.
 
(விளக்கம்) மனைவியைக் கணவனுடைய இடத்தோள் என்பது நூற்றுணிபு. மற்றையோர் செவ்விதேர்ந்து அவள் ஆறுதலடையுமாறு கூறுதல் அரிதாகலின் மற்றையோரை விடுத்துத் தெரிவியாமற் றானே தெரிவிக்க நினைந்தான் என்பது கருத்து.