உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           வேண்டிடந் தோறுந் தூண்டுதிரிக் கோளீஇக்
           கைவயிற் கொண்ட நெய்யகற் சொரியும்
     175    யவனப் பாவை யணிவிளக் கழலத்
           திருந்துசா லேகமொடு பொருந்துகத வொற்றிப்
           பளிக்குமணி யிழிகைப் பவழக் கைவினைப்
           புலிக்கா லமளிப் பொங்குபட் டசைஇ
           எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம் விரித்துக்
     180    கலத்தி னல்லது காலின் வாரா
           நலத்தகு பல்படை யழற்றற் குரியவை
           ஆய்வனர் படுத்த வம்பூம் பள்ளியுட்
 
           (பள்ளியறை)
       173 - 182: வேண்டிடந்..........பள்ளியுள்
 
(பொழிப்புரை) இன்றியமையாத இடந்தோறும் யவனப் பாவைகள் கையிலேந்திய அகலின்கண் தூண்டுதலையுடைய திரிகளையிட்டு நெய் சொரியாநின்ற அழகிய பாவை விளக்குகள் எரியா நிற்பவும், திருத்தமுற்ற சாளரங்களிலே பொருந்திய கதவுகளை ஒன்றும்படி சார்த்திப் பளிக்குமணியாலியன்ற கைச்சுரிகையினையும் பவழத்தினாலியற்றப்பட்ட புலிவடிவமைந்த கால்களையும் உடைய கட்டிலின் மேலே உயர்ந்த பட்டினைக்கட்டி எலிமயிரானியன்ற பூ வேலையமைந்த போர்வையோடு மயிர்க் கம்பலமும் விரித்து அயல் நாட்டினின்றும் மரக்கலங்களிலே வந்தனவல்லது உள் நாட்டினின்றும் வண்டிகளிலே வந்திலா வுயரிய பலவாகிய நலமிக்க படுக்கைகளுள் வைத்து ஆராய்ந்து எடுத்த படுக்கைகளை விரித்த அழகிய மலர்ப்படுக்கையின்கண் என்க.
 
(விளக்கம்) "யவனரியற்றிய வினைமாண் பாவை கையேந்தைய
னிறையநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி"
என்பது (101 - 3) நெடுநல் வாடை.

    கொண்ட அகலில் நெய் சொரியும் விளக்கு என்க.

    சாலேகம் - சாளரம் - ஒற்றி - ஒன்றச்சார்த்தி.
இழிகை - கைச்சுரிகை. அமளி - கட்டில். எலிமயிராலியற்றிய
போர்வை என்க. எலிமயிர்க்கம்பல முண்மையை, "மயிரெலியின்
போர்வையொடெம் மன்னன் விடுத்தானே" எனவும், (1874) "எலிமயிர்ப்
போர்வை வைத்து" எனவும், (2471) "எலிமயிர்த்தொழிற் பொங்கு
பூம்புகைப் போர்வை மேயினார்" எனவும், (2680) ''செந்நெ ருப்புணுஞ்
செவ்வெ லிம்மயிரந்நெ ருப்பள வாயபொற் கம்பலம்'' எனவும் (2686)
வரும் சீவக சிந்தாமணியானும் உணர்க. கலம் - மரக்கலம். கால் - வண்டி.
படை - படுக்கை. அழற்றல் - வெப்பந் தருதல். பள்ளியுள் - (213) தோன்றி
என இயையும்.