உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           பெருமூ தாட்டியர் பேணுவனர் சூழத்
           திருமா தேவி யருநக ருற்ற
     185    ஆகுலப் பூசலு மழலு மற்றிவை
           காவல னறிந்த கருத்தின னாகியென்
           வாசவ தத்தையை வலிதிறகொண் டேகினும்
           தீது நிகழினு மேத மில்லென
           நினைப்புள் ளுறுத்த நெஞ்சின ளாகி
     190    மனத்து ளோர்க்கு மம்மர் தீர
            அருங்கடி காவல ரஞ்சின ரெதிர்கொள
           இருஞ்சின வேந்தன் பெருஞ்சின மகற்றி
           வாயிலுள் வருமிடத் தெதிர்கொளற் பொருட்டாக்
           கோயிலு ளிருந்த கோப்பெருந் தேவிக்குப
 
           (திருமாதேவியின் உட்கோள்)
        183 - 194: பெருமூதாட்டியர்..........தேவிக்கு
 
(பொழிப்புரை) பெரிய முதுமையுடைய மகளிர் தன்னைப் போற்றிச் சூழா நிற்பக் கோப்பெருந்தேவி அரிய தமது உஞ்சை நகர் எய்திய துன்பக் கூக்குரலையும், தீச்செயலையும் பிற இடுக்கண்களையும் வத்தவ வேந்தனாகிய உதயணன் தெரிந்துகொண்ட நெஞ்சினனாகி என் அருமை மகளாகிய வாசவதத்தையை இவ்விடை யூற்றினின்றும் தப்புவித்து அவன் அவளை வலிதிலே கவர்ந்து கொண்டு போவானாயினும் நன்றேயாம். அவன் அவளை மணந்து கொள்ளினும் குற்றம் ஏதுமில்லை என்னும் நினைப்பினை அடக்கிய நெஞ்சமுடையவளாய் நெஞ்சினுள்ளே ஆராயாநின்ற மயக்கம் தீரும்படியாகவும், அரிய காவலர் அஞ்சி வந்து எதிர் கொள்ளா நிற்பவும், மிகவும் பெரிய சினத்தையுடைய வேந்தனது பெரிய சினத்தை அகற்றி வாயிலிலேயே அவன் வருங்கால் எதிர் கொள்ளல் வேண்டும் என்னுங் கருத்தாலே அரண்மனையகத்தேயிருந்த அக்கோப்பெருந்தேவி அங்ஙனம் மன்னனை எதிர்கோடற் பொருட்டு என்க.
 
(விளக்கம்) ஆகுலப்பூசல் - துயரக் கூக்குரல். காவலன் - உதயணன். தீது நிகழினும் என்றது, எம்முடன்பாடின்றி மணந்து கொள்ளினும் என்றவாறு. தேவிக்கு - தேவியின் பொருட்டு.