உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
                   
           பாயல் கொள்ளான் பட்டத் தேவி
     215    சாயற் செல்வந் தலையளித் தோம்பி
           அணியிய லமிர்த மாற்றிய பின்னவட்
           டெளியக் காட்டுந் தெரிவின னாகிப்
           பூங்கொடி புனைந்த வீங்குமுலை யாகத்து
           வாங்கமைப் பணைத்தோள் வாசவ தத்தையை
     220   நல்லியாழ் நவிற்றிய நளிமணிக் கொடும்பூண்
           உறுவரை மார்பி னுதயண குமரன்
           மறுவி றொன்று மனைவளத் தரூஉம்
           செல்வி யாகச் சிறப்பொடு சேர்த்தியவன்
           நாட்டகம் புகுத்தற்கு வேட்ட தென்மனன்
     225    ஒண்குழை மடவோ யுவத்தி யோவென
 
             (இதுவுமது)
       214 - 225: பாயல்..........உவத்தியோவென
 
(பொழிப்புரை) பாயல் கொள்ளானாய் வீற்றிருந்து கோப்பெருந்தேவியினது மெல்லியல் நலத்தைப் பெரிதும் பாராட்டி அவளைத் தலையளி செய்து அத்தேவி அழகும் சுவையும் ஒருங்கமைந்த அமிழ்தன்ன உணவினைத் தனக்கு ஊட்டிய பின்னர், அவட்குத் தெளிவாக உணர்த்தத் துணிந்தவனாய் "ஒள்ளிய குழையணிந்த மடவோயே! என் மனமானது பொற்பூங்கொடியணிந்த பருத்த முலையினையுடைய மார்பினையும் வளைந்த மூங்கில் போன்று பருத்த தோள்களையும் உடைய நம் செல்வி வாசவதத்தையை அவட்குச் சிறந்த யாழ் வித்தை கற்பித்த செறிந்த மணிகள் பதித்த வளைந்த அணிகலன் அணிந்த பெரியமலைபோன்ற மார்பினையுடைய உதயணகுமரனுக்கு அவனது குற்றமில்லாத பழஞ்சிறப்புடைய இல்லத்தின் வளமெலாம் நல்கும் மனைக் கிழத்தியாகச் சிறப்போடு சேர்த்திப் பின்னர் அவளை அவனோடு அவன் நாட்டிற்கும் போக்குதற்குப் பெரிதும் விரும்புகின்றதுகாண்! இச்செய்கைபற்றி நீ தானும் மகிழ்வாயல்லையோ? என்று வினவா நிற்ப என்க.
 
(விளக்கம்) அமை - மூங்கில். நவிற்றிய - கற்பித்த. நளி - செறிந்த. உறுவரை - பெரிய மலை. மறு - குற்றம். தொன்று - பழைமை. மனைவளந்தருஞ் செல்வி - இல்லக் கிழத்தி. திறப்பு - வரிசைகள்.