உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           அருமையிற் பெற்றநும் மடித்தி தன்வயிற்
           றிருமணச் சூழ்ச்சி யெழுமைத் தாயினும்
           ஏத மின்றா லின்பம் பயத்தலின்
           யானைக் கெழுந்த வெஞ்சின மடக்கிநின்
     230    தானைத் தலைத்தா டந்த ஞான்றவன்
           நிலையிற் றிரியா விளமைக் கோலம்
           உயர்பிற் றிரியா தொத்துவழி வந்த
           மகளுடைத் தாயர் மனத்தகம் புகற்றலின்
           யானு மன்றே பேணினெ னடிகள்
     235   மான மில்லை மற்றவன் மாட்டென
 
           (கோப்பெருந்தேவி கூற்று)
           226 - 235: அருமையின்..........மாட்டென
 
(பொழிப்புரை) அதுகேட்ட கோப்பெருந்தேவி பெருமானே! திருமணம் பற்றிய சூழ்ச்சி இம்மையிலே மட்டுமன்றி எழுமையினும் தொடர்புடைய தொன்றன்றோ? அருமையாகப் பெற்ற நும் அடித்தியாகிய வாசவதத்தையின் திறத்திலே தங்கள் கருத்துப் பெரிதும் இன்பம் பயத்தலாலே குற்றமிலதாகும். மேலும் நமது நளகிரிக்குத் தோன்றிய வெவ்விய வெகுளியை அடக்கி நம்மை உய்யக்கொண்டு அவ்வுதயண குமரன் படைஞரையுடைய நுங்கள் திருமுன்னர் வந்து நின்ற அப்பொழுதே அவனது நன்னிலையிற் பிறழாத இளமைத் தோற்றம், உயர்ந்த பண்புடைமையிலே பிறழாது எல்லா நலங்களும் ஒத்து உயர் குடிப்பிறப்பின் வந்த மகளையுடைய தாய்மார்களின் நெஞ்சத்தையெல்லாம் இவன் மருகனாம் பேறு எய்துமோ? என்று விரும்பச் செய்தது. அடியேனும் அங்ஙனம் ஒரு விருப்பத்தை நெஞ்சிலே கொண்டேன். பெருமானே! அவ்வுதயணன்பால் நங்கருத்திற் கொவ்வாத குற்றம் ஒன்றுமில்லையன்றோ என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) திருமணம் ஊழின் வழி நிகழ்வது, பல பிறப்பின் தொடர்புடையது என்பாள் திருமணச் சூழ்ச்சி எழுமைத்து என்றாள். யானை - நளகிரி. புகற்றலின் - விரும்புவித்தலின். மானம் - குற்றம்.