உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
250
முகைமலர்ப் பைந்தார் குழைய
முயங்கி
மடவை மன்ற மடவோய்
மண்மிசை
உடைவயிற் பிரியா துறைநரு
முளரோ
இற்றுங் கேண்மதி முற்றிழை
மகளிர்
தத்துநீர்ப் பெருங்கடற் சங்குபொறை யுயிர்த்த
255 நித்திலத் தன்னர் நினைந்தனை
காணென
ஆர்வக் காதலன் காரணக்
கட்டுரை
இகப்ப விடாஅன் றெளிப்பத் தேறிக்
|
|
(பிரச்சோதனன்
தேற்றல்)
250 - 257: முகை..........தேறி்
|
|
(பொழிப்புரை) ஆர்வம் மிக்க கணவன்
தான் அணிந்திருந்த மொட்டும் மலரும் உடைய பசிய மலர்மாலை குழையும்படி
தழுவி "நங்காய்! நீ பெரிதும் பேதைமையுடையாய்காண்! உலகத்தே
மகளிர் தமக்குரியாடத்தே சேர்தற் பொருட்டுப் பிரியாது ஈன்றோரிடமே
உறைவோரும் உளரோ? இதனையும் கேள்! நிறைந்த அணிகலனணிந்த மகளிர்
தாவாநின்ற அலைகளையுடைய பெரிய கடலில் வாழும் சங்கு கருவுயிர்த்த முத்துப்
போன்றவர்" எனச் சான்றோர் கூறுவதனையும் நினைத்துப்பார்! என்று எடுத்துக்
கூறுகின்ற காரணத்தை யுள்ளடக்கிய பொருள் பொதிந்த மொழியினால்
அத்துயரம் மிகாமல் தேற்றி நிற்றலாலே தேவி தேற என்க.
|
|
(விளக்கம்) முகை - அரும்பு.
மடவை - பேதைமையுடையோய் உடைவயின் - கணவன்பால். உடைவயிற் சேர்வதற்கு
என்க. இற்றும் - இதனையும். மதி : முன்னிலையசை. பொறை - கரு.
நித்திலம் - முத்து. இதனோடு, "நீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென் செய்யும்" எனவரும் கலியினையும்
(கலி .9.) நினைக. இகப்ப - கைகடக்க; மிக. தேறி -
தேற.
|