உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            தண்ணல் யானை யவையவை தோறும்
     30    மேலாட் கமைந்த காலாட் காப்பிற்
           கருவிப் பல்படை கடல்கிளர்ந் தெனவுறப்
           பரவை யெழுச்சிப் பக்கமு முன்னும்
           வெருவரத் தாக்கி வீழ நூறி
           நற்றுணைத் தோழ ருற்றுழி யுதவ
     35    அமிழ்தி னன்ன வஞ்சில் கிளவி
           மதர்வை நோக்கின் மாதரைத் தழீஇ
           ஓங்கிய தோற்றமொ டொருதா னாகி
           நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன்
           சேரா மன்னனுஞ் சேனையம் பெரும்பதிக்
     40    கோரிரு காவத மூரா மாத்திரம்
 
                    (படைவீரர்)
         29 - 40 :  அவையவை..........மாத்திரம்
 
(பொழிப்புரை) ஆகிய இக்குதிரைகள் தேர்கள் யானைகள் என்னும் இம் முவ்வகை யூர்திகளினும் ஏறியிருக்கும் தலைவர்கட்குப் பொருந்திய காலாள் மறவர் படையாகிய காவலையும் கருவிகளையும் உடைய பலவாகிய இப்படைகள் கடல் பொங்கி வந்தாற் போன்று வாராநிற்பப் பரந்த எழுச்சியையுடைய இவற்றை யெல்லாம் பக்கத்தேயும் முன்னேயும் சென்று அச்சமுறும்படி போர் செய்து வீழும்படி கொன்று குவித்து உதயணனுடைய நல்ல துணைவராகிய தோழமறவர்கள் இடுக்கண் உற்றுழி உதவி செய்தலாலே அமிழ்தம் போன்ற இனிய அழகிய சிலவாகிய மொழிகளையும் மதர்த்தநோக்கினையும் உடைய வாசவதத்தையைத் தழுவிக் கொண்டமையாலே உயர்ந்த தோற்றத்தோடே ஒப்பற்றவனாகிச் சென்ற உதயண குமரனுக்கு நிகழ்ந்ததனை இனிக்கூறுவேன் கேண்மின்! அவ்வுதயண மன்னன் தன் பகைவனாகிய பிரச்சோதன மன்னனுடைய உஞ்சை என்னும் பெரிய நகரத்தினின்றும் இரண்டு காவதத் தொலைவு பத்திராபதியைச் செலுத்து மளவிலே என்க.
 
(விளக்கம்) கருவி - போர்ப்படைக்கலன். படை உற, தோழர் அவற்றின் பக்கமும் முன்னும் சென்று தாக்கி நூறி உதயணனுக்கு உற்றுழி உதவியதனாலே நீங்கிய மன்னனுக்கு என்க. நிகழ்ந்தது கூறுவென் என்றது நல்லிசைப் புலவர் நம் திறத்தே அறிவித்தபடியாம். பரவை எழுச்சி - பரவிவரும் எழுச்சி. உற்றுழி-இடுக்கணுற்றுழி. மாதர்: வாசவதத்தை. வெற்றி கொண்டமையானும் குறிக்கோள் கைவந்தமையானும் உதயணன் புதுத் தோற்றமுடையவனானான் என்றவாறு. ஓரிரு -- இரண்டு.