உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            வண்டகத் தடக்கிய வாய வாகிக்
           கூலப் பொய்கையு ணீலமொடு மலர்ந்த
           கோலக் கழுநீர் குழிவாய் நெய்தல்
           எழுநீர்க் குவளையொ டின்னவை பிறவும்
     50    தாமரை தலையாத் தன்னகர் வரைப்பகம்
           ஏம மாகவிவ னெய்துவ னென்றுதம்
           தூய்மை யுள்ளமொடு கோமற் கூப்பும்
           குறுந்தொடி மகளிர் குவிவிரல் கடுப்ப
           நறுந்த ணாற்றம் பொதிந்த நன்மலர்த்
     55    தடங்கயந் துறந்த தன்மைய வாகிக்
           குடம்பை சேர்ந்து குரல்விளி பயிற்றிப்
           புட்பலம் புறுத்த புன்கண் மாலை
           கட்புல மருங்கிற் கலந்த ஞாயிற்று
           வெப்ப நீக்கித் தட்பந் தான்செயக்
 
                (மாலைப்பொழுது)
          46 - 59 :  வண்டு..........தான்செய
 
(பொழிப்புரை) கரையையுடைய குளங்களிலே கருங்குவளை மலரோடு மலர்ந்த அழகிய செங்கழுநீர் மலரும் குழிந்த வாயையுடைய நெய்தன் மலரும் நீரின்கண் வளர்கின்ற குவளை மலரும் இன்னோரன்ன பிறவுமாகிய நீர்ப்பூக்கள் தாமரை மலருட்படத் தம்பாற்றேனுண்ட வண்டுகளைத் தம் மகத்தையே அடக்கிய வாயையுடையனவாய் இதழ் குவிந்து உதயண குமரன் தன்னகரஞ் சென்று இன்புறுதற்கு இவ்வழியே வருகின்றான் என்றுணர்ந்த குறிய தொடியணிந்த குலமகளிர் தமது தூய மனத்தோடு அவனை வணங்குதற்குக் கூப்பாநின்ற விரல்களைப்போற் கூம்புவனவாக பறவைகள் நறிய குளிர்ந்த மணம் பொதிந்த நல்ல மலர்களையுடைய பெரிய குளங்களைத் துறந்த தன்மையுடையனவாய்த் தத்தம் கூடுகளிலே சேர்ந்து தத்தம் குரலாலே தத்தம் இனத்தை அழைத்துக்கூவிப் பிரிந்தோர்க்குத் தனிமைத் துன்பத்தை மிகுவிப்பத் துன்பத்தைத் தருகின்ற அவ்வந்திமாலைப்பொழுது தானும் உயிரினங்களின் கண்வழி நுழைந்த ஞாயிற்றினது வெப்பத்தை அகற்றி அவைகட்குக் குளிர்ச்சியை வழங்கா நிற்ப என்க.
 
(விளக்கம்) கூலம் - கரை. நீலம் - கருங்குவளை. கழுநீர் - செங்கழுநீர். நீல முதலிய மலர்கள் வண்டுகளை அடக்கிய வாயையுடையனவாய்க் குவிந்து மகளிர் குவி விரல்களை நிகர்ப்ப என்க. நீர் எழு குவளை என்க. ஏமம் - இன்பம். இவன்; உதயணன். கோமகன் உதயணன். குடம்பை - கூடு. புலம்புறுத்த - புலம்பினை மிகுவிப்ப.