உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            பறத்தரல் விசையினும் பண்ணினு மண்மிசை
           உறப்புனைந் தூரு முதயணன் வலப்புறத்
           தறியக் கூறிய செலவிற் றாகிக்
     75    கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பறிந்
           தோடுதல் புரிந்த வுறுபிடி மீமிசைக்
           கூந்தலுங் கூந்தல் வேய்ந்த கோதையும்
           ஏந்திளங் கொங்கையு மெடுக்க லாற்றாள்
           அம்மென் மருங்கு லசைந்தசைந் தாடப்
     80    பொம்மென வுயிர்க்கும் பூநுதற் பாவையைக்
           கைமுதற் றழீஇக் காஞ்சனை யுரைக்கும்
 
                     (இதுவுமது)
          72 - 81 :  பறத்தரல்...........உரைக்கும்
 
(பொழிப்புரை) பறத்தலை ஒத்த வேகத்தோடே பண்போன்று இலயங் கெடாமலும் மிகவும் ஒப்பனை செய்து நிலத்தின் மேல் தன்னைச் செலுத்தாநின்ற உதயணகுமரன் தொடக்கத்தே தனது வலச்செவியின்கண் தான் தெளியும்படி ஓதியபடி செல்லும் செலவினையுடையதாகிக் கோணாமல் அவ்வுதயணனுடைய குறிப்பறிந்து விரைந்தோடாநின்ற பெரிய அப்பிடி யானை மீதமர்ந்துள்ள அடர்ந்த கூந்தலையும் அக்கூந்தலிலே சூட்டிய மலர்மாலையினையும் அன்ந்த தனி இளமுலைகளையும் சுமத்தற்கும் இயலாதவளாகிய வாசவதத்தையின் அழகிய மெல்லிய இடை அசைந்தசைந்தாடா நிற்றலாலே பொம்மென உயிர்க்கின்ற அழகிய நுதலையுடைய அவ்வாசவதத்தையைக் காஞ்சனமாலை தன் கைகளாலே தழுவிக் கொண்டு கூறாநிற்பவள் என்க.
 
(விளக்கம்) பறத்தரல் - பறத்தல். பண்போன்று இலயம் பட என்க. மண்மிசையூரும் என மாறுக. வலப்புறத்துச் செவியிலென்க. கோடுதல் செல்லாது : ஒரு சொல்; கோணாமல் என்க. உறுபிடி - பெரும்பிடி. பொம்மென: ஒலிக்குறிப்பு. பாவை: வாசவதத்தை.