உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            கட்டி லாள ருடபுகன் றுறையும்
           நாகத் தன்ன நன்னகர் வரைப்பின்
           ஏகத் திகிரி யிருநிலத் திறைவன்
     85    நீப்பருங் காத னிற்பயந் தெடுத்த
           கோப்பெருந் தேவியொடு கூடிமுன் னின்று
           பொற்குடம் பொருந்திய பொழியமை மணித்தூண்
           நற்பெரும் பந்தருண் முத்துமணற் பரப்பி
           நல்லோர் கூறிய நாளமை யமயத்துப்
     90    பல்லோர் காணப் படுப்பிய லமைந்த
           செந்தீ யந்தழ லந்தணன் காட்டச்
 
                (காஞ்சனை கூற்று)
            82 - 91 :  கட்டிலாளர்...........காட்ட
 
(பொழிப்புரை) ஆடை பொருந்தி ஒளி பரப்பும் மணிகள் மிக்க மேகலையணிந்த பாவையே! (106-7) அரசுகட்டிலையுடைய மன்னர்கள் நெஞ்சுவந்து உறைதற்கிடமான தேவருலகம் போன்ற தனது நல்ல நகரத்தின்கண் ஒற்றைச் சக்கரமுருட்டும் பெரிய நிலத்திற்கு இறைவரான நின் தந்தையார் விடற்கரிய காதலையுடைய நின்னை ஈன்றெடுத்த நின் நற்றாயாகிய கோப்பெருந்தேவியாரோடு கூடி முதன்மையாக நின்று பொன்னாலியன்ற குடமமைந்த பொழிதலமைந்த மணியாலியன்ற தூண்களையுடைய நல்ல பெரிய திருமணப் பந்தரிடத்தே முத்தாகிய மணலைப் பரப்பி நல்லோராகிய கணிவர் ஆராய்ந்து கூறிய நல்ல விண்மீன் பொருந்திய நன்முழுத்தத்திலே மக்கள் பலரும் காணும்படி சமிதை முதலியன அடுக்குதலையுடைய செந்தீயாகிய அழகிய வேள்வித்தீயினை வளர்த்து எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்ட அறவோனாகிய பார்ப்பான் மறைமொழி கூறிச் சடங்கு காட்டா நிற்ப என்க.
 
(விளக்கம்) கட்டிலாளர் - அரசுகட்டிலையுடைய மன்னர். நாகம் - தேவருலகம். இறைவன் : பிரச்சோதனன். பொழிதல் - தேய்த்தல் போன்றவொரு செயல். முத்தாகிய மணல் என்க. அமையம் - முழுத்தம். மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட என்பர் (சிலப் - 1 - 52) இளங்கோவும்.