உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            சேதா நறுநெய் யாசின் றுகுத்துச்
           செழுமலர்த் தடக்கையிற் சிறப்பொடு மேற்படக்
           கொழுமலர்க் காந்தட் குவிமுகை யன்னநின்
     95    மெல்விரன் மெலிவுகொண் டுள்ளகத் தொடுங்கப்
           பிடித்துவலம் வந்து வடுத்தீர் நோன்பொடு
           வழுவில் வாலொளி வடமீன் காட்டி
           உழுவ லன்பி னுதயண குமரன்
           அருமறை யாளர்க் கருநிதி யார்த்திப்
     100    பெருமறை விளங்கப் பெற்றனன் கொள்ளக்
           கொடுத்தில னென்பது கூறி னல்லதை
 
                  (இதுவுமது)
           92 - 101 :  சேதா.........அல்லதை
 
(பொழிப்புரை) சிவந்த பசுவினது நறிய நெய்யினைக் குற்றமின்றிப் பெய்து பண்டும் பண்டும் பலப்பல பிறப்பிலும் அடிப்பட்டுவரும் பேரன்பினையுடைய உதயணகுமரன் தனது செழித்த தாமரை மலர்போன்ற பெரிய கையின்கண் சிறப்போடு நீ மேம்பாடெய்தும்படி கொழுத்த காந்தண் மலரின் குவிந்த அரும்பு போன்ற நின்னுடைய மெல்லிய விரல்கள் மேலும் மெலிந்து அகத்தே அடங்குமாறு பற்றி அத்தீயை வலம் வந்து குற்றந்தீர்தற்குக் காரணமான நோன்பினோடு குற்றமில்லாத தூய ஒளியையுடைய வடமீனாகிய அருந்ததி காட்டி அரிய மறையோதிய அந்தணர்க்கு நிரம்பத் தானம் வழங்கிய பெரிய மறைகள் விளக்கமுறும்படி ஏற்றுக்கொள்ளும்படி நீர்வார்த்து வழங்கிலன் என்னும் இவ்வொரு குறையுண்டென்று கூறினாற் கூறுவதன்றி என்க.
 
(விளக்கம்) சேதா - சிவப்புப் பசு. குத்தி - பெய்து. வழு - குற்றம். வடமீன் - அருந்ததி. என்பது - என்னும் குறை. "இறைவன் தேவியொடு முன்னின்று உதயணன் கொள்ளக் கொடுத்திலன்" என இயைக்க.