உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            அடுத்தனன் கண்டா யணிமுடி யண்ணல்
           வையத் தேனோர் வல்ல ரல்லாத்
           தெய்வப் பேரியாழ் கைவயிற் றரீஇ
     105    எழுவியல் கரணம் வழுவிலன் காட்டுநின்
           ஆசா னிவனென வருளிய வச்சொற்
           றூசார்ந்து துளும்புங் காசுவிரி கலாபத்துப்
           பைவிரி யல்குற் பாவாய் மற்றிது
           பொய்யுரை யன்றிப் புணர்ந்தன் றதனால்
     110    பொருளென விகழாது பொலங்கல மடவோய்
           மருளெனக் கருதிய மடியுறை கோண்மதி
 
                    (இதுவுமது)
          102 - 111 :  அடுத்தனன்...........கேண்மதி
 
(பொழிப்புரை) அழகிய முடிக்கலனையுடைய செம்மலாகிய உதயணகுமரன் தானே நம்பாலெய்தியருளினன் கண்டாய். இவ்வுலகிலே யாரும் கற்றுவல்லுநராகாத தெய்வத் தன்மையுடைய கோடவதியென்னும் தனது பேரியாழினை நின்கையிலே கொடுத்துஅதன்கண் இசையெழுப்பும் இயல்பாகிய கரணங்களையெல்லாம் வஞ்சமின்றி நினக்குக் கற்பித்தலாலே இவன் ''நின் ஆசான்'' என்று சான்றோர் கூறிய அம்மொழி பொய்யுரையாதலுண்டோ? ஆகாதன்றே; அம்மொழி பொய்ம்மொழியாகாமல் மெய்யேயாய் நிகழ்வதாயிற்று. ஆதலாலே நீ இச்செயலைப் பொருளாக உட்கொண்டு இகழாமல் பொன்னணிகலனுடைய மடவோயே! இப்பிடியானையின் வேகத்தாலே நமக்குத் தோன்றாநின்ற மருள் என்று கருதப்பட நின்ற இவ்வியப்பினை யான்கூறுவென் கேட்டருள்க! என்க.
 
(விளக்கம்) அண்ணல் தானேயடுத்தனன் என மாறுக. எழுவியல் - எழுப்பும் இயல்பு. கரணம் - செயல்முறை ஆசான் என்னும் சொற்குத் தலைவன் என்னும் பொருளுண்மை கருதி ஆசான் இவனென அருளிய அச்சொல் புணர்ந்தது என்றாள். மடியுறை -- பிறழ்ச்சியுறுத்தல், என்றது விம்மிதத்தை.