உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            எண்டிசை மருங்கினு மெதிரெதி ரோடி
           மண்டில மதியமொடு கதிர்மீன் மயங்கி
           நிலைக்கொண் டியலா வாகித் தம்முள்
     115    தலைக்கொண் டியலுங் தன்மை போலக்
           கண்ணகன் மருங்கின் விண்ணகஞ் சுழலும்
           மண்ணக மருங்கின் விண்ணுற நீடிய
           மலையு மரனு நிலையுற னீங்கிக்
           கடுகிய விசையொடு காற்றென வுராஅய்
     120    முடுகிய விரும்பிடி முகத்தொடு தாக்கிய
           எதிரெழுந்து வருவன போலு மதிர்வொடு
           மண்டிணி யிருநில மன்னுயிர் நடுங்கத்
           துளக்க மானா தாசி னிலைதிரிந்து
           கலக்கங் கொண்டு கைவரை நில்லா
     125    தோடுவன போன்ற வாதலின் மற்றுநின்
           நீடுமலர்த் தடங்கண் பாடுபிறழ்ந் துறழ
           நோக்கல் செல்லா திருவென நுதன்மிசை
 
        
(காஞ்சனை யானை செல்லும் வேகத்தால் தோன்றும் மருட்கையைக் கூறுதல்)
              112 - 127: எண்டிசை........இருவென
 
(பொழிப்புரை) மண்டிலமாகிய திங்களும்ஒளியுடைய விண் மீன்களும் எட்டுத் திசைகளிலும் எதிரெதிராக ஓடித் தத்தமக்குரிய இடங்களிலே நிலைகொண்டு இயங்காவாய்த் தம்முட்கூடி ஒருசேர இயங்குந் தன்மைபோன்று தோன்றும்படி இடமகன்ற பக்கங்களையுடைய வானமே சுழலாநிற்கும்; இந்நிலத்தின்மேலே நின்று விண்ணைத் தீண்ட வளர்ந்த மலைகளும், மரங்களும், தத்தமிடத்தே நிலைபெறுதலின்றி விரைந்த வேகத்தோடே காற்றுப் போலப் பெயர்ந்து விரைந்து செல்லும் நமது பிடியானையின் முகத்தோடு மோதும் பொருட்டு நம்மெதிரே எழுந்தோடி வருவன போன்று தோன்றா நிற்கும். மண் திணிந்த பெரிய நிலமானது தன்பால் நிலைபெற்ற உயிரினங்கள் அதிர்ச்சியோடு நடுங்கும்படி தானும் நடுங்குதலை ஒழியாது; இவ்வாறு எப்பொருளும் தத்தம் நிலைதிரிந்து கலக்கங் கொண்டு தத்தம் எல்லையிலே நில்லாமல் விரைந்து ஓடுவன போன்று தோன்றுகின்றன. ஆதலாலே, அப்பொருள்களை நின்னுடைய மலர்போன்ற பெரிய நெடிய கண்கள் அங்குமிங்குமாகப் பக்கங்களிலே பிறழ்ந்து மாறுபடும்படி நோக்காமல் அமைந்திருப்பாயாக என்று கூறி என்க.
 
(விளக்கம்) மண்டிலம் - வட்டம். தலைக்கொண்டு - கூடி. மரன் - மரம். உராய் - பெயர்ந்து. தாக்கிய - தாக்க. இருநிலம் உயிர் நடுங்கத் துளங்கல் ஆனாது என்க. கைவரை - எல்லை என்னு மாத்திரை. பாடு - பக்கம். உறழ - மாறுபட. நோக்கல் செல்லாது: ஒரு சொல்.