| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 48. மருதநிலங் கடந்தது | 
|  | 
| நோக்கல் 
      செல்லா திருவென 
      நுதன்மிசை வேர்த்துளி துடைத்து வித்தக் 
      வீரன்
 அருவரை யகலத் தஞ்சுவன ணீட்டித்
 130    
      திருவளர் சாயலைத் திண்ணிதிற் 
      றழீஇ
 உவணப் 
      புள்ளினஞ் சிவணிச் 
      செல்லும்
 சிறக ரொலியிற் றிம்மென 
      வொலிக்கும்
 பறவை 
      யிரும்பிடிப் பாவடி 
      யோசையின்
 அவணை போத லஞ்சி வேய்த்தோள்
 135    
      வாளரித் தடங்கண் வாலிழை 
      மாதர்
 கேள்விச் செவியிற் கிழித்துகிற் 
      பஞ்சி
 பன்னிச் செறித்துப் பற்றினை 
      யிருவெனப்
 பிடியிடை யொடுங்குங் கொடியிடை 
      மருங்கின்
 நோய்கொள லின்றி நொவ்விதிற் கடாவலென்
 140    றாய்புக ழண்ண லசைதல் செல்லான்
 | 
|  | 
| (இதுவுமது) 127 
      - 140 :  நுதல்..........செல்லான்
 | 
|  | 
| (பொழிப்புரை)  காஞ்சனமாலை 
      வாசவதத்தையின் நெற்றிமிசை  முகிழ்த்துள்ள வியர்வைத் துளிகளைத் துடைத்து 
      அச்சமுடையவளாய்  அவள் திறன்மிக்க உதயணகுமாரனுடைய அரிய மலைபோலும் 
        மார்பகத்தே சார்ந்திருக்கும்படி தன் கைகளை நீட்டித்தானும் 
      புத்தழகு  பெருகும் மெல்லிய சாயலையுடைய அவ்வாசவதத்தையைத் 
      திட்பமாகத்  தழுவிக்கொண்டு, கருடப் பறவைகள் திரளாகக் கூடிப் 
      பறந்து  செல்லாநிற்குங்கால் அவற்றின் சிறகினின்றெழும் ஓசைபோன்று ''திம் 
        திம்'' என்று ஒலிக்கும்படி பறப்பது போல விரைதலையுடைய அந்தப்   
      பெரிய பிடியானையின் பரப்புடைய அடியீட்டொலியோடே அவ்விடத்தே  
      செல்லுகின்றமைக்கு அஞ்சி அவ்வொலி துன்புறுத்தா வண்ணம் வாள்   போன்ற 
      செவ்வரி படர்ந்த பெரிய கண்களையும் சிறந்த   அணிகலன்களையுமுடைய 
      வாசவதத்தையினது பலகேள்விகளானும்   தோட்கப்பட்ட செவியின்கண் கிழிந்த 
      ஆடைப்பஞ்சினைப் பன்னிச்   செறித்து வைத்து, "இறை மகளே ! நீயும் நம் 
      பெருமானைப்   பற்றிக்கொண்டு அஞ்சாதிருப்பாயாக!" என்று கூறிப் பின்னர், 
      உதயணனை  நோக்கிப் "பெருமானே! எம்பெருமாட்டியினது ஒரு கைப்பிடியினூடே 
        அடங்குமளவு நுணுகிய கொடி போலும் இடைக்குத் துன்பமுண்டாகாத   
      அளவிலே விரைந்து செலுத்துக!" என்று வேண்டா நிற்றலானே   ஆராய்வதற்குரிய 
      புகழையுடைய அவ்வண்ணலும் அவளிடை அசைதலைப்  பரிகரித்துச் செலுத்தி 
    என்க. | 
|  | 
| (விளக்கம்)  வேர் - 
      வியர்வை. வீரன் : உதயணன் திருவளர்  சாயல் : வாசவதத்தை. திரு - உதயணனோடு 
      சேர்ந்தமையாலுண்டான  புதிய அழகென்க. உவணப்புள் - கருடப் பறவை. சிவணி - கூடி. 
      சிறகர்  - சிறகு. திம்: ஒலிக்குறிப்பு. பாவடி - பரப்பமைந்த கால். அவணை - 
        அவண்; ஐ : சாரியை. அவ்வொலி ஊறுசெய்யும் என்று அஞ்சி என்க.  
      பன்னி சீர்செய்து உதயணனைப்பற்றினை இரு என என்க. என - என்று  கூறி. 
      விரைந்து செலுத்துதலிலேயே இவளிடை வருந்தாதபடி பார்த்து   அத்துணைக்கே 
      விரைந்து செலுத்துக என்பது கருத்து. கடாவல்   என்பதனை எதிர்மறை 
      வியங்கோளாகக் கொள்ளின் போக்கிற்கிடையூறு  செய்தாளாகலின் உடன்பாட்டு 
      வியங்கோளாகவே கொள்க. அசைதல்  செல்லான் : ஒருசொல். அசையாதபடி என்க. 
      செலுத்தி என ஒரு சொல்  வருவித்துக் 
கொள்க. |