உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            பாளைக் கமுகும் பணையும் பழுக்கிய
           வாழைக் கானமும் வார்குலைத் தெங்கும்
           பலவும் பழினு மிலைவுளர் மாவும்
           புன்னையுஞ் செருந்தியும் பொன்னிணர் ஞாழலும்
     155    இன்னவை பிறவு மிடையற வின்றி
           இயற்றப் பட்டவை யெரிகதிர் விலக்கிப்
           பகலிருள் பயக்கும் படிமத் தாகி
           அகல மமைந்த வயிர்மண லடுக்கத்துக்
           காறோய் கணைக்கதிர்ச் சாறோய் சாலி
     160    வரம்பணி கொண்ட நிரம்பணி நெடுவிடை
 
                    (இதுவுமது)
            151 - 160 :  பாளை........நெடுவிடை
 
(பொழிப்புரை) பாளையையுடைய கமுகும் மூங்கிலும் பழுப்பித்த வாழைக்காடும் நீண்ட குலைகளையுடைய தென்னையும் பலாமரமும் பயின மரமும் இலை நீண்ட மாமரமும் புன்னை மரமும் செருந்தி மரமும் பொன்னிறமுடைய பூங்கொத்துக்களையுடைய ஞாழன் மரமும் இவைபோல்வன பிறவும் ஆகிய இடையீடின்றிக் குறிஞ்சி முதலிய நிலங்களினின்று கொணர்ந்து நட்டு வளர்க்கப்பட்ட மரங்கள் செறிந்து நிற்றலாலே சுடாநின்ற கதிரவன் ஒளியாகிய வெயிலை அகற்றிப் பகற்பொழுதினிலேயே இருள் உண்டாக்கும் வடிவத்தையுடைத்தாய், அகலம் அமைந்த நெடிய நுண் மணற் குன்றுகளையும் உடைத்தாய், பாரம் பொறாமையாலே வளைந்து தத்தம் அடியிலே தோயா நின்ற திரண்ட கதிரையுடைய பால் ஒழிந்து முதிர்ந்த நெற்பயிர்களாலும் அழகு கொண்ட நிரம்பிய அழகுடைய நெடிய மருதப் பரப்பாகிய இடந்தோறும் என்க.
 
(விளக்கம்) வாழைகளைக் காய்ப்பருவத்தே குலைகளை வெட்டாமல் வேண்டுமென்றே பழுக்க விட்டு வைத்தலாலே பழுக்கிய வாழை என்றார். பல - பலா. பயின் - ஒரு மரம்; மாவின் இளந்தளிர் நீண்டு தூங்கி அழகு செய்தலின் இலைவளர்மா என்றார். இம்மரங்களிற் பல அம்மருதக் கருப்பொருள் அல்லவாயினும் அவை உழவர்களால் கொண்டு வந்து வளர்க்கப்பட்டவை என்பார், இயற்றப்பட்டவை என்றார். அயிர் மணலடுக்கம் - நுண் மணலா லியன்ற குன்று சாறு ஓய்சாலி என்க சாறு - நென்மணியிற்பால் அஃது ஓய்தலாவது, பாற்கடடு நின்று முதிர்தல் என்க. சால் - தோய் எனக் கண்ணழிப்பின் படைச்சாலின்கண் தோயும் என்க. இடை - இடம்.