உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            ஒருநூற் றிருபத் தோரைந் தெல்லையுள்
           வலப்பா லெல்லை வயல்பரந்து கிடந்த
           அளற்றுநிலைச் செறுவி னகனிலங் கெழீஇ
           இடப்பான் மருங்கிற் பரற்றலை முரம்பிற்
     175    புன்புலந் தழீஇய புகற்சித் தாகி
           வன்றொழில் வயவர் வலிகெட வகுத்த
           படைப்புறக் கிடங்குந் தொடைப்பெரு வாயிலும்
           வாயிற் கமைந்த ஞாயிற் புரிசையும்
           இட்டமைத் தியற்றிய கட்டளைக் காப்பின்
     180    மட்டுமகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய
           அருட்ட நகரத் தல்கூ ணமயத்
 
                     (இதுவுமது)
           171 - 181 :  ஒருநூற்று..................நகரத்து
 
(பொழிப்புரை) நூற்றிருபத்தைந்து காவதம் சென்று முடிந்த எல்லையிலே வலப்பக்கத்தே வயல்களே பரவிக்கிடந்த சேறு நிலையுற்ற அக்கழனி நிலத்தையடுத்து இடப்பக்கத்தே பருக்கைக் கற்களையுடைய மேற்பரப்பினையுடைய மேட்டு நிலத்தையுடைய புன்செய்களை அகப்படுத்தியதும் காண்போர்க்கு விருப்பந் தருவதும் ஆகிய போர்த்தொழிலையுடைய பகைமறவர் வலிமை கெடும் பொருட்டு அமைக்கப்பட்ட மதிலைப் புறத்திற் சூழ்ந்த அகழியும் கோபுர வாயிலும் அவ்வாயிலுக்கியைந்த ஞாயிலையுடைய மதிலும் அமைத்து இயற்றப்பட்ட ஆணையையுடைய பாதுகாவலையுடைய கள்ளுண்டு களிக்கும் நெஞ்சினையுடைய மறவர்கள் குழுமிய அருட்ட நகரத்தினை அணுகி என்க.
 
(விளக்கம்) அளற்றுநிலை - சேற்றுநிலை. பரல் - பருக்கை. முரம்பு - மேட்டு நிலம் புன்புலம் - புன்செய். படை: ஆகுபெயர். தொடைப் பெருவாயில் - கோபுர வாயில். ஞாயில் - ஒரு மதிலுறுப்பு. புரிசை - மதில். மட்டு - கள். மள்ளர் - போர்மறவர். அருட்ட நகரம் - ஒரு நகரம். இஃது உதயணன் பகைவர் நகரம் என்க.