உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           வலத்திட் டூர்ந்து வழிமுதற் கோடுமென்
          றுரைப்பக் கேட்டே யுதயண குமரன்
    35    குறிவழிக் காட்டிய கொலைத்தொழி னகரம்
          அறித லஞ்சி யடியிசை கேட்கும்
          எல்லை யகன்று வல்லைமருங் கோட்டி
          முதனெறிக் கொண்டு முந்நாற் காவதம்
          கதழ்வொடு கடக்குங் காலை யவ்வழி
 
                (இதுவுமது)

                33 - 39: வலத்திட்டு..........காலை

 
(பொழிப்புரை) ஆதலின் இந்நகரத்தை வலப்பக்கத்தே வைத்து அதன் இடப்பக்கமாகச் செலுத்தி வழிச்செல்லுதலை மேற்கொள்வோம், என்று கூறக்கேட்டு உதயணகுமரன் இங்ஙனம் நன்னெறி குறித்துக் காட்டப் பட்ட கொலைத்தொழில் புரிவோர் மிக்க அவ்வருட்ட நகரத்துள்ளோர் தம் செலவினை அறிதல் அஞ்சி யானையின் அடியீட்டோசை கேட்கும் தொலை வினுக்கு அப்பால் விலகி விரைந்து அந்நகரத்தின் பக்கத்தே செலுத்தி முதன்மையான அந்நெறியைக் கொண்டு பன்னிரு காவதம் மிகவும் விரை வோடு சென்று கடக்குமளவிலே என்க.
 
(விளக்கம்) குறித்து வழி காட்டிய என்க. நகரம்: ஆகுபெயர். அடியிசை - அடியிடும் ஒலி. வல்லை - விரைந்து. மருங்கு - பக்கம். முதனெறி - முதன்மையான நெறி. கதழ்வு - விரைவு.