உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           வலத்திற் கிடந்த வழிவகை தானே
    55    வளைந்த செலவிற் றாகித் தலைத்தலைக்
          கடுஞ்சின வென்றிக் காவ லாடவர்
          கொடுஞ்சிநற் றேருங் குதிரையும் யானையும்
          காலாட் குழாத்தொடு நால்வகைப் படையும்
          ஒருநிரல் செல்லு முள்ளகல் வுடைத்தாய்த்
    60    திருநிலை பெற்றுத் தீயோ ருன்னார்
          நருமதை காறு நாட்டக மப்பால்
 
                (இதுவுமது)

            54 - 61: வலத்தின்..........நாட்டகம்

 
(பொழிப்புரை) ''''பெருமானே! இனி இவற்றுள் வலப் பக்கத்தே கிடந்த வழியின் இயல்பினைக் கூறுவென் கேட்டருள்க! அது தானும் வளைந்து வளைந்து செல்லும் இயல்புடையதாயினும், இடந்தோறும் இடந்தோறும் கடிய வெகுளியையும் வெற்றியையும் உடைய காவற் றொழிலை மேற்கொண்ட மன்னர்கள் தம்முடைய கொடுஞ்சியையுடைய நல்ல தேர்ப்படை குதிரைப்படை யானைப்படை காலாட்படை என்னும் நால்வகைப் படையோடும் ஒரே முறையிலே நிரலாக இயங்குதற் கேற்ப உள்ளிடம் விரிவுடையதாய் யாண்டும் வளம் நிலைபெற்று இவ்விடத்தி னின்றும் நருமதைப் பேரியாறு வரையில் நல்ல நாட்டகமாகும், ஆதலால் இந்நெறியைத் தீயோர் நெஞ்சினும் நினையார் காண்!' என்க.
 
(விளக்கம்) காவலாடவர் - அரசர். திரு - வளம். ஆறலைத்தன் முதலிய தீச்செயல்கட்குக் காரணம் பெரும்பாலும் வறுமையேயாகலின், திருநிலைபெற்றமையால் தீயோர் உன்னார் என்றார்.