உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           நருமதை காறு நாட்டக மப்பால்
          வஞ்சர் வாழு மஞ்சுவரு தீநிலத்
          தகலிடந் தானும் பகலிடத் தியங்குநர்க்
          கின்ப மாகிய வேம வெண்குடை
    65    மன்பெருஞ் சிறப்பின் மண்ணகக் கிழமை
          ஒருகோ லோச்சிய திருவார் மார்பநின்
          முன்னோர் காலைப் பன்னூல் பயிற்றிய
          நல்லிசை நாட்டத் துல்லியன் கண்ட
          குளமும் பொய்கையுங் கூவலும் வாவியும்
    70    அளவிறந் தினியவை யசைவிடத் துடைத்தாய்ப்
          பயப்பறு பாலை நிலனு மொருபால்
          இகக்க லாகா விரண்டினு ளுவப்பதை
          ஓட்டுக வல்விரைந் தென்றலி னுதயணன்
 
                 (இதுவுமது)

            61 - 73: அப்பால்..........என்றலின்

 
(பொழிப்புரை) ''''திருமகள் வீற்றிருக்கும் மார்பனே! நருமதை யாற்றிற்கு அப்பால் உள்ள வஞ்சகர் வாழாநின்ற அச்சம் வருதற்குக் காரணமான கொடிய பாலையாகிய அகன்ற நிலப்பரப்புத் தானும், தனது ஒரு கூற்றிலே, உயிரினங்கட்குப் பாதுகாவலாகிய வெண்குடை யினையுடைய நிலைபெற்ற பெரிய சிறப்பினையுடைய உலகாள் உரிமை யோடு ஒற்றைச் செங்கோல் செலுத்திய நின்னுடைய முன்னோர் காலத்தே பல நூல்களிடத்தும் சான்றோராற் போற்றிப் புகழப்பட்ட நல்ல புகழை எய்துவதிலே நாட்டங் கொண்டவனான ''துல்லியன்'' என்னும் அரசர் பெருமான் பகலிடத்தே இப்பாலையிலே இயங்குவோர்க்கு இன்பமாதற்கு இயற்றி வைத்த குளங்களும், பொய்கையும், கிணறும், வாவியும், எண்ணி றந்தன இனிமை தருவனவாய் வழிப்போக்கர் தங்குமிடங்களிலே உடைய தாகும். இதன் மற்றொரு கூறு பயனற்ற வறிய பாலையேயாகும்; அதனைக் கடத்த லியலாது. எனவே ஈண்டுக் கூறப்பட்ட இரண்டு நெறிகளில் வைத்து எம்பெருமான் விரும்பு மொரு நெறியிலே யானையை மிகவும் விரைந்து செலுத்தி யருளுக!" என்று கூறுதலாலே என்க.
 
(விளக்கம்) துல்லியன் இதன்கண் பகலில் இயங்குநர்க்கு இன்ப மாதற் பொருட்டுக் கண்ட குளம் முதலியன என்க. முன்னோர்காலை முன்னொரு காலத்தே துல்லியன் - உதயணன் முன்னோருள் வைத்துச் சிறந்தவொரு வேந்தன் என்க. இசை நாட்டம் - புகழெய்தும் வேட்கை, அசைவிடம்-வழிப் போக்கர் தங்குமிடம். பயப்பு-பயன். இகக்கலாகாது எனல் வேண்டிய சொல்லீறு தொக்கு நின்றது.