உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           அடக்க லாகா விடற்கரு விளையுட்
    110    கொல்லை பயின்று வல்லை யோங்கிய
          வரையி னருகா மரையா மடப்பிணை
          செருத்தற் றீம்பால் செதும்புபடப் பிலிற்றி
          வெண்பூ முசுண்டைப் பைங்குழை மேயச்
          சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை
    115    செறியிலைக் காயா சிறுபுறத் துறைப்பத்
          தடவுநிலைக் கொன்றையொடு பிடவுதலைப் பிணங்கிய
          நகைப்பூம் புறவிற் பகற்றுயி லமரா
          வரித்தா ரணிந்த விரிப்பூந் தொழுதிப்
          புல்லுத ளினத்தொடு புகன்றுவிளை யாடும்
    120    பல்லிணர்ப் படப்பைப் படியணை பெருங்கடி
          பகர்விலைப் பண்டமொடு பல்லோர் குழீஇ
          நகரங் கூஉ நாற்ற நந்திப்
          பல்லாப் படுநிரைப் பயம்படு வாழ்க்கைக்
          மன்பெருஞ் சிறப்பின் மாலை யாமத்துச்
          சென்றது மாதோ சிறுபிடி விரைந்தென்.
 
                (இதுவுமது)

             109 - 128: அடக்கல்..........விரைந்தென்

 
(பொழிப்புரை) ஆகிய தம்முள் அடக்க வியலாத விடுதற்கரிய பல்வேறு விளைச்சலையுடைய கொல்லைகள் மிகுந்து மிகவும் வளர்ந்த மூங்கிற் புதரின் மருங்கே மரையாவும், இளம் பெண் மானும் தமது மடியிற் சுரந்த இனிய பாலைச் சேறுண்டாகும்படி சொரிந்து வெள்ளிய மலரையுடைய முசுண்டையின் பசிய குழையை மேயா நிற்பவும், சிறிய தனது பிணைமானைத் தழுவி நிற்கும் முறுக் கமைந்த கொம்பையுடைய கலைமான் செறிந்த இலையையுடைய காயா மலர் தனது சிறிய முதுகிலே உதிரா நிற்ப வளைந்து நிற்கும் நிலையினை யுடைய கொன்றை மரங்களும், பிடா மரமும் ஒருங்கு பின்னி நிற்கும் ஒளி மலர் மிக்க முல்லைக் கானத்தே பகற் பொழுதிலே துயிலிற் பொருந்திப் பின்னர் வரியாகிய கோடுகளையுடைய மிக்க பொலிவுடைய கூட்டமாகிய ஆட்டினத்தோடே விரும்பி விளையாடா நிற்கும் பல்வேறு பூங்கொத்துகள் திகழும் தோட்டங்களையுடைய அளக்குங் கருவிகளையும் பெரிய காவலை யும் உடைய விலை கூறி விற்கும் பல்வேறு பண்டங்களோடு பலர் கூடிச் சென்று நகரத்தாரைக் கூவி விற்கும் பலவாகிய ஆக்கள் அடங்கிய நிரை யை யுடைய பாற்பயன் தோற்றுவிக்கும் வாழ்க்கையையுடைய கொல்லையில் வாழும் பெரிய குடிகளாகிய ஆயர்கள் குழுமிய முல்லை யென்னும் அப் பெரிய நிலம் மணம் மிகுந்து பொருந்திக் கிடந்த நூற்றிருபத்தைந்து காவதத் தொலைவின்கண் இரவின் முதல் யாமத்திலேயே நிலைபெற்ற பெருஞ்சிறப் பினையுடைய அச்சிறிய பிடியானை விரைந்து செல்லா நின்றது என்க.
 
(விளக்கம்) வரை - மூங்கில். மரையா - ஒரு விலங்கு. முசுண்டை - முசுட்டைக்கொடி. இரலை - கலைமான். புறவு - முல்லை நிலம். அமரா - அமர்ந்து. தொழுதி - கூட்டம். புல்லுதளினம் - ஆட்டினம். புகன்று -விரும்பி. படி - அளவு கருவி. கடி - காவல். பண்டம் - முல்லை நிலத்து விளையும் பொருள்கள். நாற்றம் நந்திப் புல்லுப கிடந்த என இயைக்க. நந்தி - மிகுந்து. பயம் - பால். மன்பெருஞ் சிறப்பின் சிறு பிடி என இயைக்க. அது கடந்த தொலைவினைக் கருதி இரங்குவார் சிறுபிடி என்றார். விரைந்து சென்றது என்க.

49. முல்லைநிலங் கடந்தது முற்றிற்று.