உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
50. குறிஞ்சிநிலங் கடந்தது
 
           அளப்பரும் படிவத் தான்றோர் போலத்
      5   துளக்க மில்லாத் திருத்தகு நிலைமைய
          மதுரம் பொதிந்த மழலையங் கிளவிச்
          சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்துத்
          தொட்டிமை கலந்த தூசுவிரி யல்குற்
          பட்டிமை யொழுக்கிற் பலர்தோய் சாயல்
     10   அரம்போ ழவ்வளை மகளிர் மனத்தின்
          நிரம்பா நெறியின வாகி யரும்பொருள்
          கல்லா மாந்த ருள்ளம் போல
          நொய்ந்நுரை சுமந்து மெய்ந்நயந் தெரிந்த
          மேலோர் நண்பிற் றாழ விழிதரும்
     15   அருவி யறாஅ வாகலி னயல
          பருவி வித்திய பைந்தாட் புனந்தோ
          றீரமில் குறவ ரிதண்மிசைப் பொத்திய
          ஆரத் துணியொடு காரகில் கழுமிய
          கொள்ளிக் கூரெரி வெள்ளி விளக்கிற்
     20   கவரிமா னேறு கண்படை கொள்ளும்
          தகரங் கவினிய தண்வரைச் சாரல்
 
                 (குறிஞ்சி நிலம்)
           4 - 21 : அளப்பரும்..........சாரல்
 
(பொழிப்புரை) பிறரால் அளவிடற்கரிய நோன்பினை மேற்கொண்ட துறவோர் போன்று எஞ்ஞான்றும் சிறிதும் நடுங்குதலில்லாத அழகு தக்கிருக்கின்ற நிலைமையை உடையனவும், இனிமையுடைய மழலைத் தன்மையுடைய அழகிய சொற்களையும் நாற்சந்திகளிடத்தும் நாணுதல் இல்லாது குழுமுதலையும் ஒற்றுமையாகக் கொய்சகமிட்ட ஆடையணிந்த விரிந்த அல்குலினையும் வஞ்சமுடைய ஒழுக்கத்தையும் பல ஆடவரும் தோயா நின்ற சாயலையும் அரத்தாற் பிளக்கப்பட்ட அழகிய வளையலையும் உடைய வரைவின் மகளிர் மனம் போன்று கடைபோய் நிரம்பாத குறைவழிகளையும் உடையனவும் ஆகி நூல்களைக் கல்லாத மாக்கள் நெஞ்சம் போன்று நொய்யனவாகிய நுரைகளைத் தாங்கி மெய்ம்மையினது நலத்தையுணர்ந்த மேன்மக்களது நண்பு போன்று ஆழவீழ்கின்ற அருவிகள் ஒழியா ஆதலின் தம் பக்கங்களிலே பருத்தி விதைக்கப்பட்ட பசிய தினைத்தாள்களையுடைய தினைப்புனந்தோறும் அன்பில்லாத குறவர் தம் பரண்களிலே மூட்டிய சந்தனக் கட்டையும் கரிய அகிற் கட்டையும் இட்டு மூட்டிய நிரம்பிய கொள்ளியாகிய மிக்க நெருப்பு ஆகிய வெண்மையுடைய விளக்கின் ஒளியிலே கவரிமானேறுகள் துயில்கொள்ளா நின்ற தகரமரங்கள் அழகுற்றுத் திகழாநின்ற குளிர்ந்த மலைகளின் சாரலின் கண்ணே என்க.
 
(விளக்கம்) ஆன்றோர்போல நிலைபெற்றனவும், மகளிர் மனம்போன்று நிரம்பாநெறியுடையனவும், ஆகிய வரை எனவும், அருவியறாதனவாகலின் வித்திய புனந்தோறும் குறவர் பொத்திய எரியாகிய விளக்கில் ஏறுதுயில் கொள்ளும் குளிர்ந்த வரை யெனவும், தனித்தனி கூட்டுக.

    துளக்கம் - நடுக்கம். சதுரச் சந்தி - நாற்சந்தி. சமழ்ப்பு - நாணம். கலாபம் - கூட்டம். ஒட்டிமை - ஒற்றுமை. பட்டிமை - வஞ்சனை. மகளிர்: பரத்தையர். கல்லாமாந்தர் உள்ளம் நொய்யனவே சுமந்திருத்தல் போன்று பயன்படாத நொய்ய நுரையைச் சுமந்தென்க. அருவி அருமை வித்தற்குங் கண்படை கோடற்கும் தகரம் கவினுதற்கும் ஏதுவென்க. பருவி - பருத்தி, புனம் - தினைப்புனம். ஈரம் - அன்பு. ஆரத்துணி - சந்தனக்கட்டை. தகரம் - ஒரு மரம்.