|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 50. குறிஞ்சிநிலங் கடந்தது | | நறையு நாகமு
முறையிரு வேரியும்
வருக்கையு மாவும் வழையும்
வாழையும் அருப்பிடை
நிவந்த வாசினி மரமும் 25 பெருஞ்செண்
பகமும் பிண்டியும்
பிரம்பும்
கருங்கோற் குறிஞ்சியுங் கடிநாள்
வேங்கையும்
சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு
மரலும் வால்வெள்
வசம்பும் வள்ளிதழ்க்
காந்தளும் பால்வெண்
கோட்டமும் பனிச்சையுந் திலகமும் 30
வேயும் வெதிரமும் வெட்சியுங்
குளவியும் ஆய்பூந்
தில்லையு மணிமா
ரோடமும் ஆரமுஞ்
சந்து மகிலுந்
தமாலமும் ஏரில
வங்கமு மேலமு மிருப்பையும்
| |
(இதுவுமது) 22
- 33 : நறையும்..........இருப்பையும்
| | (பொழிப்புரை) நறைக்கொடியும்
நாகமரமும் மணமுறைகின்ற வெட்டிவேரும் விலாமிச்சைவேரும் ஆகிய இருவேரியும்,
வருக்கைப் பலாமரமும், மாமரமும், சுரபுன்னைமரமும், வாழையும், அருவழியின்கண்
வளர்ந்துள்ள ஆசினிப்பலாவும், பெருஞ்செண்பக மரமும், அசோக
மரமும், பிரம்பும், கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரமும், திருமணநாள்
உணர்த்தும் வேங்கைமரமும், ஆச்சா மரமும், சூரற்கொடியும், வள்ளிக்
கொடியும், மரலும், மிகவும் வெண்மையான வசம்பும், பெரிய இதழையுடைய
காந்தளும், பால்போலும் வெண்மையுடைய கோட்ட மரமும், பனிச்சைமரமும்,
திலக மரமும், வேய் மூங்கிலும், வெதிர் மூங்கிலும், வெட்சியும், காட்டு
மல்லிகையும், அழகிய மலரையுடைய தில்லை மரமும், அழகிய செங்கருங்காலி
மரமும், ஆர மரமும், சந்தன மரமும், அகின் மரமும், பச்சிலை மரமும்,
எழுச்சியையுடைய இலவங்கமும், ஏலமும், இருப்பை மரமும் என்க.
| | (விளக்கம்) இருவேரி - வெட்டிவேரும்
விலாமிச்சைவேரும் வருக்கை - பலாவில் ஒருவகை. வழை சுரபுன்னை. அருப்பிடை -
அருவழி. ஆசினி - ஈரப்பலா. பிண்டி - அசோகு. வேங்கை மலரும் நாள்
குறிஞ்சி நிலமாக்கள் திருமணஞ் செய்தற்குரிய நாள் என்று கொள்வராதலின்
கடிநாள் வேங்கை எனப்பட்டது. சுள்ளி - ஆச்சாமரம் கோட்டம் - ஒரு மரம்.
பனிச்சை திலகம் என்பனவும் மரங்கள். வேய் வெதிர் என்பன மூங்கில்
வகைகள். குளவி - காட்டுமல்லிகை. மாரோடம் - செங்கருங்காலி. ஆரம்
சந்து என்பன இரண்டும் சந்தனமர வகைகள்.
|
|