உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
50. குறிஞ்சிநிலங் கடந்தது
 
           மாட நிரைத்த மறுகை போல
          நிரப்ப மெய்தி முரப்புநிலை முனாது
     45   கல்லிற் காட்டிய செல்லற் றூவழிப்
          பிண்டி பிணங்கிப் பிலம்புக் கதுபோல்
          கண்டவர்க் காயினுங் கடத்தற் காகா
          அருமை யெய்திய வரிலமை யாரிடை
          இறும்பம லடுக்கத் தின்றேன் கொளீஇய
     50   பொங்கெரி விளக்கம்.............ம்
          ஏனற் பெருந்தினை யேனங் காவலர்
          கானற் பெருமரங் கண்ணுற மாட்டி
          இருள்பட வோங்கிய வெல்லை வேலிதொறும்
          வெருள்படப் போக்கிய வெண்டீ விளக்கம்
     55   மங்குல் வானத்து மதிநிலா மழுங்கக்
          கங்குல் யாமத்துக் கடையற வெழுந்த
          கதிரோன் போல வெதிரெதிர் கலாஅய
          நறும்பூஞ் சோலை நாற்றங் கழுமிய
          குறிஞ்சிப் பெருந்திணை குலாஅய்க் கிடந்த
     60   பதிற்றுப் பத்தொடு விதிப்பட வெண்ணிய
          ஐயைந் தெல்லையு மரையிரு ணடுநாள்
          எய்தி யிகந்தன்றா லியற்றமை பிடியென்.
 
                  (இதுவுமது)
          43 - 62 : மாடம்..........பிடியென்
 
(பொழிப்புரை) மாடமாளிகைகள் நிரல்பட்ட வீதி போன்று நிரம்புதல் பெற்றுப் பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்திலே நிற்றலை வெறாமல் கன்னிலத்திலே உண்டாக்கப்பட்ட துன்பந்தரும் வன்மையுடைய வழியிலே அசோக மரங்கள் பின்னி நிற்றலாலே ஊடு செல்வார்க்கு முழைகளிலே நுழைந்தாற் போல்வதாகி முன்னர்ப் பயின்றறிந்தவர்க்கும் கடந்து செல்லுதற்கு இயலாத அருமையுடைத்தாகிய சிறு தூறுகள் பின்னிக் கிடத்தலையுடைய அரிய இடங்களிலே குறுங் காடுகள் செறிந்த பக்கமலைகளிலே இனிய தேனைக் கொள்ளுதற் பொருட்டுக் குறவர்கள் கையிற் கொண்ட மிக்கெரிகின்ற கொள்ளிகளும்.....ஏனலாகிய பெரிய தினையைப் பன்றிகள் அழித்துவிடாமற் காவல் செய்யாநின்ற குறவர்கள் தம் தினைப்புனங்களின் எல்லையாகிய வேலிகளின் மருங்கே சோலையின்கண் தாம் வெட்டிய பெரிய மரங்களை நெருப்பின்கட் பொருந்த இட்டு அப்பன்றிகள் வெருண்டோடும்படி எழுப்பிய இருள் அழியும்படி உயர்ந் தெரியாநின்ற வெள்ளிய தீயின் பேரொளிகள் முகிலையுடைய வானத்தேயுள்ள திங்கள் மண்டிலத்தினது நிலாவொளி மழுங்கிப்போம்படி இருளையுடைய இரவின் கடையாமத்திறுதியில் எழுந்த பல ஞாயிற்று மண்டிலங்கள் போன்று தோன்றி ஒன்றற் கொன்று எதிர் எதிர் பரவிக் கலந்த சோலைகளிலே மலர்ந்த நறிய மலர்களின் மணங்களும் நிரம்பி வளைந்து கிடந்த குறிஞ்சியாகிய அந்தப் பெரிய நிலத்தினது முறைப்படி நூற்றிருபத்தைந்து காவதம் என்று கணிக்கப்பட்ட பரப்பினையும் ஒப்பனையுடைய அப்பத்திராபதி இருளையுடைய நள்ளிரவிலேயே சென்று கடவா நின்றது என்க.
 
(விளக்கம்) மறுகை - வீதி. நிரப்பம் - நிரம்புதல். முரப்பு நிலை முனாது - பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்தில் நிற்றலை வெறாமல். கல் - கன்னிலம். செல்லம் - துன்பம். தூ - வலிமை. பிலம் - குகை. அரில். சிறுதூற்றின் பிணக்கம். இறும்பு - குறுங்காடு. கொளீஇய - கொள்ளற் பொருட்டு. இதற்குக் குறவர் என எழுவாய் வருவித்தோதுக. 50 ஆம் வரியில் இரண்டு சீர்ச் சொற்கள் அழிந்தன. விளக்கமும் என்க. ஏனம் - பன்றி. கானல் - ஈண்டுச் சோலை என்னுமளவிற்றாய் நின்றது. தீயின் கண்ணுற மாட்டி என்க. வெருள் - வெருட்சி வருள்படப் போக்கிய இருள்பட வோங்கிய வெண்டீ விளக்கம் என இயைக்க. இருள்பட வோங்கிய வேலி எனலுமாம். எதிரெதிர் கலாஅய் என்றமையால் பல கதிரோன் போல என இல்பொருள் உவமையாகக் கொள்க. இ யற்று - ஒப்பனை.

50. குறிஞ்சிநிலங் கடந்தது முற்றிற்று.