உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
           குங்குமத் தாதும் பைங்கறிப் பழனும்
          கிழங்கு மஞ்சளுங் கொழுங்காற் றகரமும்
          கடுப்படு கனியுங் காழ்த்திப் பிலியும்
          சிற்றிலை நெல்லிச் சிறுகாய்த் துணரும்
    30    அரக்கின் கோலொ டன்னவை பிறவும்
          ஒருப்படுத் தொழியாது விருப்பி னேந்தி
          மலைவயிற் பிறந்த மாண்புறு பெருங்கலம்
          நிலைவயின் வாழ்நர்க்குத் தலைவயி னுய்க்கும்
          பகர்விலை மாந்தரி னுகர்பொரு ளடக்கி
 
                (இதுவுமது)

               26 - 34: குங்கும..........அடக்கி

 
(பொழிப்புரை) குங்குமப்பூவின் துகளும் பசிய மிளகுக் கனியும் மஞ்சட் கிழங்கும் கொழுவிய அடியினையுடைய தகர மரமும் கடுப் பழமும் வயிரமுடைய திப்பிலியும் சிறிய இலைகளையுடைய நெல்லியினது காய்க் கொத்துகளும் கொம்பரக்கும் ஆகிய இவை யும் இவை போன்ற பயனுடைய பிற பொருள்களையும் ஒருங்கே கூட்டிக்கொண்டு எவ்விடத்தும் நில்லாமல் விருப்பத்தோடு இவற்றை யெல்லாம் சுமந்துகொண்டு மலையிலே தோன்றிய மாட்சிமையுடைய பெரிய அணிகலன்கட்குரிய மணி முதலியவற்றை ஊர்களிலே உறை கின்ற மக்கட்கு அவரவர் இருப்பிடத்தே கொணர்ந்து கொடுக்கின்ற வணிக மக்கள் போன்று மாந்தர் நுகரும் பல்வேறு பொருள்களையும் தன்பா லடக்கிக் கொண்டென்க.
 
(விளக்கம்) தாது - பூந்துகள். கறி - மிளகு. மஞ்சட் கிழங் கென்க. கடுக்கனி என்றது : கடுக்காயை. கடு - ஒரு மரம். அரக்கின்கோல் - கொம்பரக்கு. ஒருப்படுத்து - ஒருங்கு சேர்த்து. மாண்புறுபெருங் கலம் - மணி பொன் முதலியன. விலைபகர் மாந்தர் என்க. வணிகர் என்ற வாறு. நுகர் பொருள் - மாந்தர் அனுபவிக்கும் பொருள். இதனோடு
'மணியும் பொன்னும் மயிற்றழைப் பீலியும்
அணியு மானைவெண் கோடு மகிலுந்தன்
இணையி லாரமு மின்னகொண் டேகலான்
வணிக மாக்களை யொத்ததவ் வாரியே'
எனவரும் கம்பர் செய்யுளை (ஆற்றுப் - 7.) ஒப்பிடுக.