உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
         
    55    புள்ளி மானும் புல்வாய்த் தொகுதியும்
          ஆமா வினமுந் தாமா றோடி
          இடைப்புனற் பட்டவை புடைப்புனற் கிவரப்
          பொறிமயிற் பேடை போத்தொடு புலம்ப
          எறிமயி ரேனமொ டெண்கின மிரியக்
    60    குரங்கு முசுவு மரந்தொறும் வாவச்
          சுரும்புந் தும்பியும் விரும்புபு விரைய
          அகத்துறை பல்லுயி ரச்ச மெய்தப்
          புறத்துறை பல்லுயிர் புகன்றுவிளை யாடப்
          படிவப் பள்ளியொடு பாக்கங் கவர்ந்து
    65    குடிகெழு வளநாடு கொள்ளை கொண்டு
          கவ்வை யோதங் கால்கிளர்ந் துராஅய்ப்
          பௌவம் புகூஉம் படர்ச்சித் தாகி
 
               (விலங்கு முதலியன)

                55 - 67: புள்ளி...........ஆகி

 
(பொழிப்புரை) புள்ளி மான்களும் ஏனை மானினங்களும் ஆமான் கூட்டமும் வெருண்டு எதிரெதிராகப் பாய்ந்து நள்ளாற்றின்கண் அகப்பட்டவைகள் நீரின் பக்கத்தேயுள்ள கரையை நோக்கி நீந்தா நிற்பவும், புள்ளியையுடைய மயிற் பேடைகள் ஆண் மயிலோடு அலமந்து அகவா நிற்பவும், பகையைக் கொல்கின்ற முள்ளாகிய மயிரையுடைய முள்ளம் பன்றிகளும், கரடித் திரளும் கெட்டோடா நிற்பவும், குரங்குகளும் முசுவும் மரந்தோறும் தாவி ஏறாநிற்பவும், சுரும்பும் தும்பியும் அவ்வெள்ளத்தை விரும்பி விரைந்து பரவா நிற்பவும், நீரினூடே வாழும் பல்வேறு உயிரினங்களும் தனது வேகத் தாலே அஞ்சா நிறபவும்; நீரின் புறத்தே வாழாநின்ற் பல்வேறு உயிரினங் களும் தன்னைப் பெரிதும் விரும்பி விளையாடா நிற்பவும், நோன்புடைய துறவோர் பள்ளிகளையும், பக்க நிலங்களையும், கவரந்து கொண்டும், குடிகள் மிக்குப் பொருந்திய வளமிக்க நாடுகளைக் கொள்ளை கொண்டும், ஆரவாரமுடைய அவ்வியாற்று வெள்ளம் பல கால்வாய்களாகக் கிளர்ச்சி யுற்றுப் பரவிக் கடலிலே கலக்கின்ற செலவினையுடையதாகி என்க.
 
(விளக்கம்) புள்ளிமானல்லாத ஏனை வகை மான்களைப் புல்வாய்த் தொகுதி என்றார். ஆமான் - காட்டுப்பசு. புனற்புடைக்கு இவர என்க. பொறி - புள்ளி. போத்து - ஆண் மயில். எறி - கொல்லு கின்ற, கொல்லுகின்ற. ஏனம் மயிரேனம் எனத் தனித்தனி கூட்டிப் பன்றி எனினுமாம். முசு - குரங்கில் ஒருவகை. சுரும்பு தும்பி என்பன வண்டின் வகை. அகத்துறையுயிர் - மீன் முதலியன. புகன்று - விரும்பி. படிவம் - நோன்பு. பாக்கம் - பக்க நிலங்கள். கால் - கால்வாய். பௌவம் - கடல். படர்ச்சி - செலவு.