உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
           கருங்காற் குருகுங் கம்புளுங் கழுமிப்
          பெரும்பூட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும்
    70    குளிவையும் புதாவுந் தெளிகயக் கோழியும்
          அன்றிலு நாரையுந் துன்புறு கெழீஇ
          வாளையும் வராலு நாளிரை யாக
          அயிரையும் பிறவு மல்கிரை யமைத்துப்
          பறவைப் பார்ப்பினஞ் சிறுமீன் செகுத்து
    75    வார்மண லடைகரைப் பார்வலொடு வதியும்
          சும்மை யறாஅத் தன்மைத் தாகிக்
          கயம்பல கெழீஇ யியங்குதுறை சில்கிப்
          பெருமத யானையொடு பிடியினம் பிளிற்றும்
          நரும்தைப் பேர்யாறு நண்ணிய பொழுதில்
 
               (இதுவுமது)

                 68 - 79: கருங்கால்..........பொழுதில்

 
(பொழிப்புரை) கரிய கால்களையுடைய நாரையும் சம்பங் கோழி யும் நிறைந்தும் பூணியும் பிளந்த வாயையுடைய கொக்கும் குளிவை யும் பெருநாரையும் தெளிந்த குளங்களில் வாழும் நீர்க்கோழியும் அன்றிற் பறவையும் சிறு நாரையும் ஆகிய இன்னோரன்ன பறவைகள் நெருங்கியிருந்து வாளை மீன்களையும் வரால் மீன்களையும் தமக்குப் பகற்காலத்துணவாகத் தேர்ந்து தின்று அயிரை மீனையும் அதுபோன்ற பிற சிறு மீன்களையும் இரவுப் பொதின்கண் தமக்கு இரையாகும்படி பற்றிக்கொண்டு போய்க் கூட்டில் வைத்தும், இப்பறவைகளும் இவற்றின் குஞ்சுகளும் சிறிய மீன்களைக் கொன்று தின்று நீண்ட தனது மணலாகிய நீரடை கரையின்கண் பின்னரும் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் அசையாத பார்வையோடு உறையா நிற்கும் ஆரவாரம் ஒழியாத தன்மையை யுடையதாகித் தன்னகத்தே மடுக்கள் பலவும் பொருந்தப் பெற்று மக்கள் இறங்கிக் கடத்தற்குரிய துறைகள் மிகச் சிலவே உடையதாய்த் தன் மருங்கே வந்து நீருண்ணும் பெரிய மதயானைகளும் பிடியானைகளும் இடையறாது பிளிறா நிற்றற்கிடனான நருமதையென்னும் பெரியயாற்றினை எய்திய காலத்தே என்க.
 
(விளக்கம்) குருகு - நாரை. கம்புள் - சம்பங்கோழி. பூணி - ஒரு வகைப் பறவை. இக்காலத்து இப்பெயர் இறந்தது என்பர் நச்சினார்க்கினியர் (சீவக - 2108). பெரிய அணிகலன் அணிந்தாற் போன்ற அழகுடையவொரு பறவை போலும். அதனால் பூட்பூணி என்று பெயர் பெற்று நாளடைவில் பூணி என்றே வழங்கப்பட்டது போலும். இவ்வாசிரியர் பெரும்பூட்பூணியென்றே வழங்குதல் உணர்க. குளிவை: இது குளுவை என்றும் வழங்கப்படும். புதா - பெருநாரை. வாளையும் வராலும் பெரிய மீன்களாதலால் கூட்டிற்குக் கொண்டு போக மாட்டாமல் பகலுணவாக அவ்விடத்தேயே தின்கின்றன என்ற வாறு. நாளிரை - பகலிற்றின்னுமிரை. அல்கிரை - இரவில் தின்னும் இரை. பார்வல் - பார்வை. சும்மை - ஆரவாரம். கயம் - மடு. இயங்கு துறைகள் ஒரு சிலவே உடைத்தாகி என்க.