உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
         
    80    தலைப்பெருந் தண்புன றான்வந் தன்றென
          நிலைப்பரு நீணீர் நீத்திற் றாகி
          மார்க்கடல் வரைப்பின் மன்னுயிர்க் கியன்ற
          ஆக்கமுங் கேடுஞ் சாற்றிய தொப்ப
          வளமலர்ப் பைந்தார் வயந்தக னிழிதந்
    85    திளமணற் படாஅ தியங்குதுறை நோக்கிக்
          கானிலை கொள்வுழித் தானிலை காட்ட
 
                (வயந்தகன் வழிகாட்டல்)

                80 - 86: தலைப்பெரும்..........காட்ட

 
(பொழிப்புரை) அந்த நருமதையாறு தான் முதன் முறையாக வெள்ளம் பெருகி வந்ததோ என்று வியக்கும்படி நிலைத்தற்கரிய நீண்ட அவ்வெள்ளம் நீந்துதற்குரியதாகிப் பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தே வாழும் உயிரினங்கட்குத் தோன்றாநின்ற ஆக்கத்தை யும் அழிவையும் ஒருங்கே எடுத்துக் காட்டுவது போன்று தோன்றா நிற்ப, அதுகண்ட வளமுடைய பசிய மலர் மாலையையுடைய வயந்தகன் பிடியானையினின்றும் இழிந்து ஆற்றில் இறங்கிக் கால் ஆழுமியல்புடைய இளமணலில்லாத பெருமணலையுடைய இயங்கு துறையொன்றினை ஆராய்ந்து கண்டு அத்துறையிலே சென்று ஆற்றினைக் கடந்து சென்று கால்நிலை கொள்ளற்குரிய இடத்தைத் தானே நிலைகொண்டு நின்று காட்டு தலாலே என்க.
 
(விளக்கம்) தன்னாலே நேர்ந்த ஆக்கமும் கேடும் எடுத்துக் கூறுவது போலத் தோன்ற என்க. இளமணல் - நொய்ம்மணல். இதன் கண் கால் ஆழும் என்க. பெருமணலில் கால் ஆழாவென்க.