உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
         
     15     செறிதோற் பரமு மெறிகோல் வாளும்
           அப்புப் புதையு மணிவரிச் சிலையும்
           செப்புறச் செய்த செல்வ முன்றிற்
           ............................றிகழ்மதி முகத்தி
           எண்வகைப் பொலிந்த வொண்படைத் தடக்கைக்
     20    கச்சார் வனமுலைக் கண்மணிக் கொடும்பூட்
           பச்சைப் பாற்கிளி பவழச் செவ்வாய்
           முத்தேர் முறுவன் முயங்குகயற் றடங்கட்
           சிலையேர் புருவச் செங்கட் செல்வி
           கலைகா முறுவி நிலைகா முற்ற
     25    கற்சிறைக் கோட்டத்து நற்சிறை யொடுங்கி
 
                     (இதுவுமது)
              15 - 25 :  செறி..........ஒடுங்கி
 
(பொழிப்புரை) செறிந்த தோலாற்போர்த்திய கிடுகும் எறிகோலும் வாளும் அம்புக்கட்டும் அழகிய வரிதலையுடைய வில்லும் செப்பமுண்டாக இயற்றப்பட்ட சிற்பச் செல்வமுடைய முற்றத்தையுடைய ..........விளங்கா நின்ற மதிபோன்ற திருமுகத்தையுடையவளும், எட்டு வகைப்பட்ட பொலிவுடைய ஒள்ளிய படைக்கலங்களை ஏந்திய எட்டுப் பெரிய கைகளையும், கச்சுப்பொருந்திய அழகிய முலைகளையும், கண்மணியாலாகிய வளைந்த அணிகலனையும் உடையவளும் பால்பருகும் பச்சை நிறமுடைய கிளியைப் போல்பவளும் பவழம் போன்று சிவந்த வாயினையும் முத்துப்போன்ற பற்களையும் ஒன்றையொன்று எதிர்ந்து முயங்கா நின்ற கயல்மீன்கள் போன்ற பெரிய கண்களையும், வில்லையொத்த புருவத்தையும் உடையவளும், செங்கட்செல்வியும், கலைமான் ஊர்தியை விரும்புபவளும் ஆகிய கொற்றவை எழுந்தருளியிருத்தலைப் பெரிதும் விரும்பப்பட்ட கன் மதிலையுடைய கோயிலின்கண் அமைந்த நன்மையுடைய வொருபக்கத்தே மறைந்திருந்து என்க.
 
(விளக்கம்) தோற்பரம் - தோல் போர்த்த கிடுகு. அப்புப் புதை - அம்புக்கட்டு. சிலை - வில். இவையெல்லாம் சிற்பம் என்பார் செப்புறச் செய்த என்றார். செப்பு - செப்பம். புகழ் எனினுமாம். எட்டுவகைப்பட்ட படையையுடைய எட்டுத் தடக்கை யென்க. இவ்வெட்டுப் படைகளையும்,

    "பட்டய மெடுத்தொருகை பத்திர மெடுத்தொருகை பற்றுமழுவும், சொட்டையு மெடுத்திருகை சக்கர மெடுத்தொருகை சுற்று மயிலும், வட்டமு மெடுத்திருகைவச்சிர மெடுத்தொருகை மற்கரதலம், எட்டினும் விதிர்ப்பன சுழற்றுவன வெந்தழ லெழுந்தெரியவே" எனவரும் அரிச்சந்திர புராணத்தானும் (விவாக. 117.) உணர்க. கண்மணி - உருத்திராக்கமணி. பச்சைக்கிளி பாற் கிளி எனத் தனித்தனி கூட்டுக. கோட்டம் - கோயில். சிறை - பக்கம்.