உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            நீடிரு ளல்லது நீந்துத லரிதென
           எதிர்மலர்ப் பைந்தா ரேயர் பெருமகன்
           அதிர்கயம் விட்ட காலை யவ்வழி
           ஆய்ந்த கோலத் தமரரும் விழையும்
     85    தீந்தொடைப் பேரியாழ் திவவொடு கொளீஇ
           யாப்புறு புரிஞாண் வீக்குமுத லவிழ
           ஓர்ப்பில் காலை யுதயண குமரனை
           நீப்பிட மிதுவென நினைப்பது போலப்
           பஞ்சுரம் பழுனிய பண்முறை நிற்ப
     90    வெஞ்சுரக் கான்யாற்று வேயொடு பிணங்கிக்
           கொய்தகை பொதும்பர்க் கையகன் றொழிய
 
                   (யாழ் விழுதல்)
             81 - 91 :  நீடிருள்..........ஒழிய
 
(பொழிப்புரை) நெடிய இவ்விரவுப் பொழுதினன்றிப் பகற் பொழுதிலே கடத்தல் அரிதாகும் என்று கருதி எதிரெதிர் அமைத்துப் புனைந்த மலரையுடைய பசியமாலையினையணிந்த ஏயர்குலத் தோன்றலாகிய உதயணகுமரன் முழங்காநின்ற அப்பிடியானையை விரைந்து செலுத்திய பொழுதிலே, அங்ஙனம் சென்ற விடத்தே பலரும் ஆராய்ந்து நன்றென்று பாராட்டிய பேரழகினையுடையதும் தேவரும் விரும்புதற்குரிய சிறப்புடையதும் ஆகிய இனிய நரம்பினையுடைய கோடவதியென்னும் அப்பேரியாழ் தனது வார்க்கட்டிலே கோத்துக் கட்டிய புரியையுடைய கயிற்றின் கட்டு அவிழ்தலாலே தன்னைச் சிந்தித்தலில்லாத இப்பொழுதே இவ்வுதயண குமரனை யான் பிரிதற்குத் தகுந்த செவ்வியாகும் என்று கருதியதனைப் போன்று, பாலைப் பண்ணியல் நிரம்பிய பண்ணிசைக்கும் தனது இயல்பு ஒழியா நிற்ப வெவ்விய அப்பாலை நிலத்தில் அப்பெருவழி மருங்கே நின்றதொரு மூங்கிலிற் சிக்குண்டு கொய்யத் தகுந்த இலைகளையுடைய ஒரு சிறு காட்டின் கண்ணே உதயணனைக் கைவிட்டு வீழ்ந்தொழியாநிற்ப என்க.
 
(விளக்கம்) ஏயர் பெருமகன் - உதயணன். அதிர்கயம் : வினைத் தொகை. கோலத்துப் பேரியாழ். விழையும் பேரியாழ், தொடைப்பேரியாழ் என இயைக்க. திவவு - வார்க்கட்டு. ஓர்ப்பு - சிந்தித்தல். உதயணகுமரனை நீப்பிடம் இதுவென நினைப்பதுபோல என்றது தற்குறிப்பேற்றம். பஞ்சுரம் - பாலைப்பண். பிணங்கி - சிக்குண்டு.