உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            மன்பெருஞ் சிறப்பின் மாத்தா ளிரும்பிடி
           எண்பதி னெல்லை யோடிக் கண்சுழன்
           றுதிரப் புள்ளி யூழுழ் வீழ்தரப்
     105    பொதியவிழ் முட்டையிற் புறப்படத் தோன்றி
           இறுதி யிடும்பை யெய்துபு மறுகித்
           தாழ்ந்த கையிற் றாகித் தலைபணிந்
           தாழ்ந்து செலவின் றாட்டந் தோன்ற
 
                   (பிடி மெலிவடைதல்)
              102 - 108 :  மன்பெரு..........தோன்ற
 
(பொழிப்புரை) பெரிய சிறப்பினையும் பெரிய கால்களையும் உடைய கரிய பத்திராபதி என்னும் அப்பிடியானை பின்னரும் எண்பது காவதம் விரைந்தோடி அப்பால் கண்கள் சுழலப்பட்டு அடியிடு மிடந்தோறும் முறைமுறையே குருதி புள்ளி புள்ளியாக வீழாநிற்பக் கட்டுடையாக நின்ற முட்டைபோன்று வெளிப்படையாகத் தோன்றும்படி சாக்காட்டுத் துயரத்தை அடைந்து மனமும் சுழன்று முன்னர் உயர்த்துச் சென்றது போலன்றித் தூங்க விடப்பட்ட கையையுடையதாய் முன்னர் எடுத்துச் சென்ற தலையும் பணிந்து கவிழாநிற்ப நடையு மோய்ந்து உடல் தள்ளாடுதல் தோன்றுதலானே என்க.
 
(விளக்கம்) மன் - கழிவிரக்கம் பற்றி வந்தது. மா - பெரிய. கட்டுடைந்து குஞ்சு வெளிப்படும் முட்டை சிதையுமாறு பொறிகள் சிதைந்து வெளிப்படையாகத் தோன்றி என்க. "குடம்பை தனித் தொழியப் புட்பறந் தற்றே யுடம்பொ டுயிரிடை நட்பு" என்னும் திருக்குறளும் ஈண்டு நினைக; (குறள் - 338). இறுதியிடும்பை - சாக்காட்டுத் துயரம். மறுகி - சுழன்று. செலவின்று - செலவின்றி. ஆட்டம் - மெய்த்தள்ளாட்டம்.