உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            இன்னுயி ரின்னே விடுமிதற் கின்றென
     110    மன்னுயிர் காவலன் மனத்தி னெண்ணி
           யானை வித்தக னாதலி னழனிலத்
           தேனை நின்ற விருபதி னெல்லையும்
           எய்துவ னென்னுஞ் சிந்தையன் வெய்துற்
           றேரலர் தாரோ னாற்றலி னூர்தரக்
     115    கோலக் குமரன் குறிப்புவரை நில்லாது
           காலக் கரணத்துக் கடும்பிணி கனற்ற
           ஊன்றதர்ந் திழிந்த வுதிர வெம்புனல்
           தான்புறப் பட்டுத் தாங்குதற் கரிதாய்
 
                     (இதுவுமது)
            109 - 118 :  இன்னுயிர்..........நலிய
 
(பொழிப்புரை) உலகத்தே நிலைபெற்ற உயிரினங்களைப் பாதுகாக்குந் தொழில் பூண்ட வேந்தனாகிய அவ்வுதயணன் இப்பிடி யானைக்கு இன்றே இப்பொழுதே இனிய உயிர் நீங்கிவிடும் என்று மனத்தின்கட்டெளிந்த யானை நூல் வித்தகன் ஆதலானே, தனது வித்தகத் திறத்தினாலே இப்பாலைநிலத்தே எஞ்சிக் கிடந்த ஏனை இருபது காவதத்தொலைவினையும் இப்பிடி யானையைக் கொண்டே கடப்பேன் என்னும் கருத்துடையனாய் அதன் பொருட்டுத் துன்புற்றும், அழகு மலர்கின்ற மாலையணிந்த அவ்வுதயண குமரன் பின்னரும் அதனைத் தூண்டித் தனது ஆற்றலானே செலுத்தா நிற்ப, அவ்வியானை தானும் அழகிய அவன் குறிப்பின் எல்லை காறும் நில்லாமல் போகூழின் செயலால் கொடிய பிணி கனற்றுதலாலே தசைசிதைந்து ஒழுகிய குருதியாகிய வெவ்விய நீர் தானே அப்புண்வழிப் புறப்பட்டுத் தடைசெய்தற்கரியதாய் என்க.
 
(விளக்கம்) இதற்கு இன்று இன்னே இன்னுயிர் விடும் என மாறுக. காவலன் - உதயணன். அழனிலம் - பாலைநிலம். வெய்துற்றும் எனல் வேண்டிய உம்மை தொக்கது. காலம் - வினை விளைகாலம்.்.