உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
           கரும்படு தீஞ்சொற் காஞ்சனை யெழீஇ
          அவர் பக்கம் விரைவனை யிழிகெனக்
     10    கவர்கணை நோன்சிலை கைவயி னடக்கி
          வருத்தமுற் றலமரும் வாளரித் தடங்கட்
          டிருத்தகு தாமரைத் திருப்புக்குத் திளைக்கும்
          அருவரை யகலத் தணிபெறத் தழீஇக்
          கருவரை மிசைநின் றிருநிலத் திழிதரும்
     15    உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக்
          கண்ணணங் கவிரொளிக் கடவுள் போல
          மத்தக மருங்கிற் றத்துவன னிழிதர
 
               (இதுவுமது)
          8 - 17: கரும்பு...........இழிதா
 
(பொழிப்புரை) பின்னர்க் காஞ்சன மாலையை நோக்கிக்
  'கரும்பையும், வெல்லும் இனிய மொழியினையுடைய காஞ்சனமாலாய்!
  நீ தானும் விரைந்து எழுந்து இப்பிடியானையின் பின்பக்கத்தின் வழியே
  இறங்குக!' என்று பணித்துப் பின்னர்த் தானும் பகைவர் ஆவி கவரும்
  அம்புப் புட்டிலையும் வலிய வில்லையும் கையிலே பற்றிக்கொண்டு
  இந்நிகழ்ச்சிகளைக் கண்டு துன்புற்றுச் சுழலா நின்ற வாள்போன்ற செவ்வரி
  யோடிய பெரிய கண்களையுடைய வாசவதத்தையை அழகு வீற்றிருத்தற்குத்
  தகுதியுடைய தாமரை மலரின்கண் எழுந்தருளியிருக்கும் திருமகள் தானே
  விழைந்து வந்து சேர்ந்து தழுவுதற்கிடனான கடத்தற்கரிய மலைபோன்ற
  தனது மார்பின்கண்ணே அம்மார்பு பின்னும் எழிலுறும்படி தழுவிக்கொண்டு
  கரியதொரு மலையுச்சியினின்றும் பெரிய நிலத்திலே  இறங்காநின்ற
  உமையம்மையாரோடு கூடிய இமையாத கண்களை உடையவனும் காண்போர்
  கண்களை வருத்தாநின்ற மிக்க ஒளியையுடைய திருமேனியையுடையவனும்
  ஆகிய பிறவாயாக்கைப்  பெரியோன் போன்று அப்பிடியானையின்
  உச்சியினின்றும்  பக்கத்தே குதித்து இறங்காநிற்ப என்க.
 
(விளக்கம்) காஞ்சனை : விளி. இனி கரும்படு தீஞ்சொற் காஞ்சனையை
  எழுப்பி என இரண்டாவதன் பாற்படுத்தினுமாம் அவர பக்கம் - பின்பக்கம்.
  கவர்கணை : வினைத்தொகை. கணை என்றது, ஆகுபெயர்; அம்பறாத்தூணி
  யென்க. நோன்சிலை - வலியவில். வருத்தமுற்றலமரும் வாளரித் தடங்கண்:
  பன்மொழித் தொடர்: வாசவதத்தை என்க. கண்ணணங்கு - காண்போர் கண்ணை
  வருத்துகின்ற கடவுள் - சிவபெருமான். ஈண்டுக் கூறப்பட்ட உவமை பெரிதும்
  இன்பமுடைத் தாதலுணர்க.