உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            மருங்குற மண்மிசை வீழின் மற்றென்
           இரும்புறத் திருந்தோர்க் கேதமென் றெண்ணி
     20    மல்குநீ ருடுக்கை மண்ணக மடந்தையைப்
           புல்லிக் கோடல் புரிந்தது போலப்
           பாவடி நிலனுறப் பரப்பி யுதயணன்
           சேவடி தலையுறச் செய்தது பொறுவென
           வணக்கஞ் செய்வது போல மற்றுத்தன்
     25    அணிக்கேழ்ப் பொறிச்செவி யாட லாற்றாது
           செங்கேழ்த் துருத்தியி னங்காந் துயிர்த்தொறும்
           பைசொரி பவழம் போலப் படிதாழ்
           கைசொரி யுதிரங் கான்றுவந் திழிதர
 
                (பிடி வீழ்தல்)
           18 - 28: மருங்குற..........இழிதர
 
(பொழிப்புரை) அப்பிடி யானை தானும் பக்கத்தே நிலத்தின் மேற்சாய்ந்து
  வீழ்ந்தால் என்னுடைய பெரிய முதுகின்மேல் வீற்றிருப்பவர்கட்குப் பெரிதும்
  இன்னலுண்டாகும் என்று கருதி அங்ஙனம் வீழாமல் பெருகும் நீரையுடைய
  கடலை ஆடையாக உடுத்த நிலமகளைத் தழுவிக் கொள்ளலைப் பெரிதும்
  விரும்பியது போன்று தனது பரப்புடைய கால்களை நிலத்திலே பொருந்தும்படி
  பரப்பிக்கொண்டு முன்புறத்தே குதித்துநின்ற உதயணனுடைய சிவந்த அடிகளிலே
  தனது தலை தோயும்படி செய்து 'பெருமானே! இவ்வாறு நின்னை நடுவழியிற் கை
  விட்ட இக்குற்றத்தைப் பொறுத் தருள்க!' என்று அவனடியிலே வீழ்ந்து வணக்கம்
  செய்வது போன்றும், மேலும் அழகிய நிறமுடைய புள்ளிகளையுடைய
  செவிகளைத்தானும் அசைத்தல் செய்யாமல் சிறந்த நிறமுடைய நீர் வீசும்
  துருத்திபோன்று தனது கையையுயர்த்தி மூச்செறியுந்தோறும் பையினின்றும்
  சொரியப்படுகின்ற பவழம் போல அக்கையினின்றும் சொரிகின்ற நிலத்திலே
  தாழ்கின்ற குருதி காலப்பட்டு வந்து வீழாநிற்ப என்க.
 
(விளக்கம்) ஏதம் - துன்பம். பாவடி - பரப்புடைய அடி. செய்தது - செய்த
  குற்றம். அஃதாவது - இடையிலே கைவிட்டுப்போதல். கேழ் - நிறம். பை -
  கைக்குவமை. பவழம் - குருதிக் குவமை. கான்று - காலப்பட்டு.