உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            வீழ்ந்த வாறுமது நோக்கிய திசையும்
     30    தேர்ந்த நூல்வழித் திண்ணி தாகலின்
           அந்திலை யெய்து மிடுக்கணும் பின்னிலைத்
           தன்னிலத் தழூஉதலுந் தான்வலிப் பெய்தி
           மணியும் புரோசையு மணிபூண் டவிசும்
           கடித்தக முட்பட வெடுத்தனன் களைஇ
     35    இன்னுயி ரினிவிடு மிதனுக் கின்றென
           மன்னுயிர் காவலன் மனத்தி னெண்ணித்
           துன்னிய தோழற்குத் தோன்றக் கூறி
 
                 (உதயணன் செயல்)
                29 - 37: வீழ்ந்த..........கூறி
 
(பொழிப்புரை) உதயணன் அப்பிடி விழுந்த முறையினையும், அது
  நோக்கிக் கிடந்த திசையினையும் நிமித்தநூல் வழியே ஆராய்ந்து
  இப்பொழுது தனக்கு இடையூறு நிகழும் என்பதையும் பின்னர்த் தான்
  அவ்விடையூற்றைக் கடந்து தனது நாட்டை எய்தி இன்புறுதலையும்
  அறிந்து துணிந்து அப்பிடியானைக்குக் கட்டியிருந்த ஒலி மணியையும்,
  புரோசைக் கயிற்றையும் ஒளி மணிகளையும்  அணிகலன்களையும்
  முதுகிலிட்ட இருக்கையினையும் கடித்தகத்தையும் உட்படக் களைந்
  தெடுத்துவிட்டு இப்பிடி யானைக்கு இன்று இப்பொழுதே இன்னுயிர்
  நீங்கிவிடும் என்று நெஞ்சத்தே நினைந்து அந்நினைப்பினைத் தன்னை
  நெருங்கிய தோழனாகிய வயந்தகனுக்கும் கூறி என்க.
 
(விளக்கம்) பிடி வீழ்ந்த முறையையும் நோக்கிய திசையையும் நிமித்தமாகக்
  கொண்டு என்க. அந்நிமித்தத்தால் உடனே தனக்குத் துன்பமும் பின்னர்
  இன்பமும் உண்டாகும் என்று நிமித்த நூலால் அறிந்தான் என்க. வலிப்பெய்தி
  - மனந்துணிந்து. மணி - ஒலிமணி. புரோசை - யானைக் கழுத்திடு கயிறு.
  தவிசு - முதுகிலிடு மெத்தை. கடத்தகம் - யானையின் பின்புறத்தே கட்டித்
  தூங்கவிடும் ஓர் உறுப்பு. உறை என்பாருமுளர் 35 ஆம் 36 ஆம் அடிகளாகிய
  இரண்டும் 54 ஆம் காதையின்கண் 109 - 110 ஆம் அடிகளாக விருத்தலும்
  காண்க. தோழன் - வயந்தகன்.