உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            வத்தவ ரிறைவன் மத்தகம் பொருந்திக்
           குளிர்ப்பத் தைவந் தளித்த லானான்
     40    இறுதிக் காலத் துறுதி யாகிய
           ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றிச்
           செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பி
           எம்மை யிடுக்க ணிம்மை தீர்த்தோய்
           வரும்பிறப் பெம்மோ டொருங்கா கியரெனச்
     45    செந்தா மரைக்கண் டெண்பனி யுறைப்ப
           நிறுத்த லாற்றா நெஞ்சினிகழ் கவற்சியன்
 
                 (இதுவுமது)
         38 - 46: வத்தவர்..........கவற்சியன்
 
(பொழிப்புரை) வத்தவ வேந்தனாகிய உதயணன் பின்னர் அப்பிடி
  யானையின் மத்தகத்தின் மருங்கே சென்று அவ்வியானை மனங்குளிர்க்கும்படி
  அதன் மத்தகத்தைத் தன் கையாற்றடவி அளி செய்தலை ஒழியானாகி
  மேலும்; அதன் இறுதிக் காலத்தே அதற்கு மறுமைக்கண் உறுதிபயக்கும்
  ஓம்படை மறைமொழியை மரபாகப் பன்முறையும் கூறி அப்பிடியானை
  செல்லும் மறுபிறப்பின்கண் உயரிய பிறப்படைதற்கியன்ற மறை மொழியினையும்
  அதன் செவியிலே அறிவுறுத்துப் பின்னும் ஆராமையாலே அப்பிடியை
  நோக்கி 'அன்புடைய பிடி நங்கையே! இம்மைப் பிறப்பாலே எமக்கெய்திய
  இடுக்கண் தீர்த்த உதவியோயே! வருகிற பிறப்பிலே நீ எம்மோடு ஒருங்குகூடக்
  கடவைகாண்!' என்று கூறித் தனது செந்தாமரை மலர் போன்ற கண்கள் தெளிந்த
  துன்பக்கண்ணீரைத் துளியாநிற்ப அடக்கவியலா தபடி நெஞ்சிலே நிகழாநின்ற
  துன்பத்தையுடையவனாய் என்க.
 
(விளக்கம்) மனங் குளிர்ப்ப என்க. தைவந்து - தடவி. இறுதிக் காலத்தே
  கேட்டார்க்கு மறுமைக் குறுதியாகிய ஓம்படைக்கிளவி என்க. ஊழின்பால்
  ஓம்படுத்துக் கூறலின் ஓம்படைக்கிளவியாயிற்று. செல்கதி மேற்செல்லும்
  பிறப்பு. 'அற்புளஞ் சிறந்தோர் பற்று வழிச் சேறல்' (சிலப் - 30 - 137)
  உண்மையின் ''எம்மை யிடுக்கண் இம்மை தீர்த்தோய்
  வரும் பிறப்பு எம்மொடாகியர்' என்றான் என்க. கவற்சி - துன்பம்.