உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            மறுத்து முதயணன் வயந்தகற் குரைக்கும்
           பெறற்கரும் பேர்யாழ் கைவயிற் பிரிந்ததும்
           இயற்றமை யிரும்பிடி யின்னுயி ரிறுதியும்
     50    எள்ளு மாந்தர்க் கின்ப மாக்கி
           உள்ளு தோறு முள்ளஞ் சுடுதலிற்
           கவற்சியிற் கையற னீக்கி முயற்சியிற்
           குண்டுதுறை யிடுமணற் கோடுற வழுந்திய
           பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல
     55    இருவே மிவ்விடர் நீக்குதற் கியைந்தனம்
 
                        (இதுவுமது)
              47 - 55: மறுத்தும்..........இயைந்தனம்
 
(பொழிப்புரை) மீண்டும் உதயணன் வயந்தகனுக்குக் கூறுவான்
  :-'நண்பனே! இவ்வுலகத்தே யாண்டும் பெறுதற்கரிய நமது பேரியாழாகிய
  கோடவதி நம் கையினின்றும் அகன்றதும், ஒப்பனை செய்யப்பட்ட பெரிய
  பத்திராபதியினது இனிய உயிர் இறுதியுற்றதும், ஆகிய இவ்விரு நிகழ்ச்சிகளும்
  நம்மையிகழும் பகைவர்க்கெல்லாம் இன்பத்தைச் செய்து யாம் நினைக்குந்
  தோறும் நம்முள்ளத்தைச் சுடுதலானே இத்துயரத்தாலே நாம் கையற
  வெய்துதலை ஒழித்து ஆழமான யாற்றினது இறங்கு துறைக் கண்ணே நீர்
  கொணர்ந்து குவித்த மணற்கரையின் கண்ணே மிகவும் அழுந்திய வண்டியை
  அத்துறையினின்று பெரிதும் முயன்று ஏற்றுகின்ற எருதிணை போன்று யாம்
  இருவேமும் நமது முயற்சியினாலே இப்பொழுது நமக்கெய்திய இவ்விடரை
  நீக்குதற்கு அமைந்துளேங்காண்!' என்க.
 
(விளக்கம்) தெய்வ யாழாகலின் பெறற் கரும் பேரியாழ் என்றான்.
  எள்ளுமாந்தர் - பகைவர். கவற்சி - துயரத்தின் நானிலைகளுள் வைத்து
  இரண்டாநிலை. அவை அவலம் கவலை கையாறு அழுங்கல் என்பன.
  இவை நிரலே ஒன்றற் கொன்று ஏதுவாகலின் கவற்சியிற் கையறல் என்றான்.
  'குண்டு துறை இடுமணற் கோடுற அழுந்திய பண்டி துறையேற்றும் பகட்டிணை
  போல இருவே மிவ்விடர்நீக்குதற்கியைந்தனம்'  என்னும் இதனோடு,
  'ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட்டன்ன வெங்கோன்'
  எனவும் (புறநா - 60) 'பண்டச் சாகாட்டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக்
  கற்பக நடக்கும் பெருமிதப்பகட்டுக்குத் துறையுமுண்டோ' எனவும் (புற - 90)
  'மடுத்தவா யெல்லாம் பகடன்னான்' எனவும் (திருக்குறள் - 624) 'நிரம்பாத
  நீர்யாற்றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி
  மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி உரங்கெட் டுறுப்பழுகிப்
  புல்லுண்ணா பொன்றும்' எனவும் (சீவக - 2784) வரும் பிற சான்றோர்
  மொழிகளையும் ஒப்புக் காண்க.
  குண்டு துறை - ஆழமான நீர்த்துறை. மணற்கோடு - மணற்கரை. பண்டி -
  வண்டி. பகட்டிணை - இரண்டெருதுகள்.