உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            திருவேர் சாயலைத் தேமொழித் துவர்வாய்க்
           காஞ்சன மாலையொடு கண்படை கொளீஇக்
           காவ லோம்பெனக் காவல னருளிக்
           கவர்கணை நோன்சிலை கைவயி னீட்டி
     60    அரணக் கூர்வா ளசைத்த தானையன்
           கரணச் சேடகங் கைவயி னடக்கி
           விச்சையின் மெலிந்துதன் விழுத்தகு நகரிழந்
           தச்சமொ டொளித்த வணித்தகு பேரொளிக்
           கோலக் குமரன் போலத் தோன்றி
 
                   (இதுவுமது)
           56 - 64: திருவேர்..........தோன்றி
 
(பொழிப்புரை) திருமகள் போன்ற சாயலையுடைய வாசவதத்தையையும்
  இனிய மொழியினையும் பவளம் போன்று சிவந்த வாயினையும் உடைய
  காஞ்சன மாலையையும் துயில்வித்து வயந்தகனை  நோக்கி இவர்களை
  விழிப்புடன் பாதுகாப்பாயாக! என்று பணித்தருளிப் பகைவர் உயிரைக் கவரும்
  அம்பையும் வலிய வில்லையும் அவன் கையிலீந்து பாதுகாவலாகிய தனது
  கூரிய வாளைக் கட்டிய ஆடையையுடையனாய்ப் போர்த்தொழிலிற் செயலாற்றுதற்
  கியன்ற கேடகத்தைக் கைக்கொண்டு தான் ஓதும் மறைமொழியின்கட்
  சோர்வடைந்து தனது சிறப்புடைய வானவர் நகரத்தையிழந்து அச்சத்தோடு
  நிலவுலகத்தே வந்து கரந்து திரியாநின்ற அழகு தக்கிருக்கின்ற பேரொளிபடைத்த
  அழகிய ஒரு தேவமகன் போன்று காணப்பட்டு என்க.
 
(விளக்கம்) திரு - திருமகள். ஏர்: உவமவுருபு. துவர் - பவளம். கண்படை
  கொளீஇ - துயில்வித்து. காவலன் வயந்தகனுக்குப் பணித்தருளி என்க. அரணம்
  - காப்பு. தானை - ஆடை. கரணம் - செய்கை. சேடகம் - கேடகம்; கிடுகு.
  விச்சை - வித்தை. வித்தையை மறந்து நகரிழந்து கரந்து திரியும் தேவ குமரன்,
  உதயணனுக் குவமை. தோன்றி - காணப்பட்டு.