உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
         
     65    மடப்பிடி தனக்கு மாக்கடன் கழியா
           தியங்குத லிலக்கண மிறைமகற் கின்மையிற்
           செய்வது துணியுஞ் சிந்தைச் சூழ்ச்சியன்
           வெவ்வழி நிலமிசை வில்லேப் பாட்டிடை
           எவ்வெம் மருங்கினுந் தெரிவோ னவ்வழி
 
                   (இதுவுமது)
           65 - 69: மடப்பிடி..........தெரிவோன்
 
(பொழிப்புரை) எவ்வுயிர்க்கும் உறுதி பயப்பிக்கும் வேந்தன்
  மகனாகிய தனக்கு உற்றுழியுதவிய அவ்விளம்பிடியானைக்கு
  இன்றியமையாத  இறுதிக்கடனைச் செய்து முடியாது வாளாபோதல்
  அறமின்மையாலே அதற்கு அக்கடன் செய்து கழிப்பதனைத்
  துணியாநின்ற சிந்தையின்கண் அதுபற்றி ஆராய்பவன் வெவ்விய
  வழியையுடைய அப்பாலை நிலத்தின்கண் வில்லில் வைத்து விசைத்து
  எய்யப்படுமோர் அம்பு சென்று வீழுந்தூரத்திலே, தானிருக்கு
  மிடத்தினின்றும் நாற்றிசையினும் நீர் நிலையுளதோ, என்று ஆராய்கின்ற
  காலத்தே என்க.
 
(விளக்கம்) மாக்கடன் - சிறந்த கடன். இறுதிக்கடன் செய்தற்குரிய
  மக்கள் முதலியோரை இல்லாதிறந்தோர்க்கு அக்கடனை அரசன் செய்து
  அவர்களை நற்கதியிலுய்த்தல் வேண்டும் என்பது ஓர் அரசிலக்கணம்
  ஆகலின் பிடிதனக்குக் கடன் கழியாது போதல் இறைமகற்கு இலக்கண
  மன்மையின் என்று கருதினான். இக்கருத்தினைத்,
     "தாயொக்கு மன்பிற் றவமொக்கு நலம் பயப்பின்
     சேயொக்கு முன்னின் றொருசெல்கதி யுய்க்கு நீரால்"
  எனவரும் கம்பராமாயணத்தானும் (அரசியற் - 4) உணர்க. வில்+ஏ+பாடு+இடை.
  வில்லின்கண்வைத்தெய்த அம்பு வீழும் இடம் என்க. தானிருக்குமிடத்தைச் சூழ
  அம்பு வீழும் தூரம் வரை சென்று பார்த்து என்பது கருத்து.