உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
எவ்வெம்
மருங்கினுந் தெரிவோ னவ்வழி 70
நல்காக் கரவ னடுவன்
மேல்வர
ஒல்காத் தவமிலா தொளித்தது
போலக் குண்டுசுனை
யடுக்கத்துக் கொழுங்கனி
வீழ்ச்சிப்
பண்ணமை படைச்சுவர்க் கண்ணகன்
றமைந்து நாற்பெரு
வாயி லேற்ப வியற்றிக் 75 கற்படை
யமைத்துக் கடுமழை மறப்பினும்
உப்படு நீரோ டூற்றுடைத்
தாகி வாசற வறியா
வளப்பருங் குட்டத்துப்
பாசடைத் தாமரை யாம்பலொடு
பயின்று புட்புகன்
றுறையுமோர் பூம்பொக் கரணியை 80
முற்படக் கண்டே முகனம ருவகையன் |
|
(இதுவுமது) 69 - 80:
அவ்வழி.........உவகையன் |
|
(பொழிப்புரை) ஆங்கோரிடத்தே யார்க்கும் வழங்குமியல்பிலாத வச்சையன் ஒருவன்பால்
கூற்றுவன் வந்துற்றபோது அவன் பண்டொருகாற் செய்த கெடாத தவம் அவனுக்குக்
கைதராமல் அவன்பால் இல்லையாய் மறைந்து விடுதல் போன்று அப்பாலை
நிலத்தும் ஆழ்ந்து வறியவாய்க் கிடக்கும் சுனைகளையுடைய
மலைப்பக்கத்தே கொழுவிய கனிகள் தன்பால் வீழப்படும்
வீழச்சியையுடைய பழுமரங்களை மருங்கே யுடையதாய்த் தன்னைச் சூழந்துள்ள
பண்ணுத லமைந்த படைகளையுடைய மதிலின் அகத்தே அகல முடையதாய்ப் பொருந்தி
நாற்றிசையினும் நான்கு பெருவாயில்கள் தன் சிறப்பிற் கேற்ப
இயற்றப்பட்டுக் கற்றளமும் படுத்தப்பட்டுக்கடிய பெயலையுடைய மழைபெய்யாது
மறந்தொழிந்தாலும் தன்னகத்தே எப்போதும் வற்றாதுகிடக்கும் நீரோடு ஊற்று
நீரையும் உடையதாகி அளத்தற்கரிய ஆழத்தினை யுடையதாய்ப் பசிய இலைகளோடு
கூடிய தாமரையும் ஆம்பலும் மிகுந்து பறவைகள் எப்பொழுதும் விரும்பியுறைதற்
கிடனான ஓர் அழகிய தாமரைக்குளம், தன்முன்னே தோன்றக் கண்டு முகத்தே
பொருந்திய மகிழ்ச்சியை யுடையவனாய என்க. |
|
(விளக்கம்) கவரவன் -
வச்சையன்: உலோபி. உலோபியின்பால் பண்டு செய்த தவம் இருப்பினும் அஃது
உற்றுழி உதவாமல் மறைந்து இல்லையாவது போல இப்பாலை நிலத்தும் பண்டொரு
காலத்தே அறவோன் ஒருவனாலே அமைக்கப்பட்ட குளம் வழிப்போக்கர்க்குப்
பயன்படாமல் மறைந்திருந்தது என்பது கருத்து. நடுவன் - கூற்றுவன். சுனை -
நீர்வறந்த சுனையென்க. கொழுங்கனி தன்பால் வீழ்தலையுடைய தாய் என்க.
எனவே தன்னைச்சூழ்ந்து பழுமரம் நிற்கப் பெற்றது என்பது பெற்றாம் இக்குளம்
இயற்கையா யமைந்த தன்றென்பார், பண்ணமை படைச்சுவர்க்கண் அகன்று அமைந்து
என்றார். முன்னர் 49 ஆங்காதையின்கண் வாயந்தகன் உதயணனுக் குணர்த்திய
(62 - 69) வஞ்சர் வாழும்......துல்லியன் கண்ட குளமும் ......என்னும்
செய்தியால் இக்குளமும் அந்தத் துல்லியனால் இயற்றப்பட்டதென்பது
உணரப்படும் என்க. கற்படை - கற்றளம். ஊற்று - ஊற்றுநீர். மழைமறப்பினும்
வாசு அறவறியா என்க. வாசு - நீர். புகன்று - விரும்பி. பொக்கரணி - புட்கரிணி
என்பதன் திரிபு. புட்கரிணி - தாமரைக்குளம். |