உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
95 கழிபிடி வலங்கொண்
டொழிவிடத் தொழிந்து
துணைபிரிந் தனைய னிணைபிரி
மகன்றிலிற்
போத லாற்றான் காதலிற்
கழுமிப்
பிடிக்க ணின்ற பேரன்
பானான்
வடிக்கண் மாதர் வருத்த மோம்பிப்
100 பகலிடத் தற்றம் படாமை
யிருக்கும்
அகலிட மறித லருமை யுடைத்தெனத் |
|
(இதுவுமது) 95
- 101: கழி...........உடைத்தென |
|
(பொழிப்புரை) பின்னர்
இறந்தொழிந்த அப்பத்திராவதியை வலம் வந்து வணங்கி அஃதிறந்த
விடத்தினின்றும் அகன்று போங் காலத்தும் நல்ல துணைவனைப் பிரிந்தவன்
போன்று வருந்துவானாய் அவ்விடத்தினின்றும் போதல் இயலாதவனாய் அதன்பாற்
காதலாலே நிரம்பித் தன் பெடையைப் பிரிகின்ற மகன்றிற் சேவலைப்
போன்று அப்பிடியானைபாற் செல்லா நின்ற தனது பேரன்பு தணியானாய
வாசவதத்தை முதலியோரிடத்திற்கு வந்து வயந்தகனை நோக்கி 'நண்பனே !
மாவடு போன்ற கண்களையுடைய இம்மகளிருடைய துன்பத்தை அகற்றி வருகின்ற
பகற்காலத்தே யாம் சோர்வு படாமல் தங்கியிருத்தற்கு ஏற்றதோர் அகன்ற
இடத்தைக் காண்டல் இவ்விடத்தே மிகவும் அருஞ்செயலாகும் போலும் என்று கூறி
என்க. |
|
(விளக்கம்) வடி - மாவடு.
மாதர்: வாசவதத்தையும் காஞ்சன மாலையும். வருத்தம் - வழிவந்த நலிவு.
அற்றம்படுதலாவது - சோர்வுபட்டு ஆறலை கள்வராலே காணப்படுதல். நீர்நிலை
காண்டற்கு அவ்விடனெல்லாம் சுற்றிப்பார்த் தமையாலே அத்தகைய இடம்
ஈண்டில்லை என்பான் இடமறிதல் அருமையுடைத் தென்றான். ஊர்தியின்மையான்
அப்பாலைநிலத்தை நடந்துகடத்தல் பகற்பொழுதில் இயலாதென்பான்,
இருக்குமிடம் என்றான். |