உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            நாட்டுச் சந்திது நாமிவ ணீந்தி
     110    ஒன்றிரு காவதஞ் சென்ற பின்றைக்
           குன்றகச் சாரற் குறும்புபல வடக்கிநம்
           வன்றா ளிளையர் வாழ்பதிக் கியங்கும்
           வழியது வகையுங் தெரிவழிக் குறையும்
           திகைத்திலே னாதன் மதிக்குமென் மனனே
     115    மடத்தகை மாதர் வருந்தினு நாமிவட்
           கடப்பது கருமம் காவல வருளென
 
                  (இதுவுமது)
          109 - 116: நாட்டு............அருளென
 
(பொழிப்புரை) ''மேலும் இவ்விடம் இரண்டு நாடுகட்கு எல்லையுமாகும்.
  ஆதலான் யாமிவ்விடத்தே தங்குதல் நலமன்று காண் ! எங்ஙனமாயினும்
  யாம் இவ்விடத்தினின்றும் ஒன்றிரண்டு காவதத்தைக் கடப்போமாயின்
  பின்னர் மலைகளையும் மலைசார்ந்த இடங்களையும் குறும்புகள்
  பலவற்றையும் அகத்தே கொண்டதும் நமர்களான வலிய முயற்சியையுடைய
  வீரர்கள் வாழாநின்றதுமான நமது நாட்டிற்குச் செல்லாநின்ற வழியினது
  வகை நன்கு தோன்றுமிடத்தே நமது துயரமும் குறைவதாகும். யான் இப்பொழுது
  இத்துயரத்தாலே திகைப்புற்றிலேன் காண். மேல் நிகழ்ச்சியினையே சிந்திக்கும்
  என் நெஞ்சம். வேந்தே ! மடமும் அழகுடைய இம்மகளிர் பெரிதும்
  வருந்துவாரேனும் நாம் இவ்விடத்தைக் கடந்து போவதே செயற்குரிய
  நற்செயலாகும். இனி எம்பெருமான் என் கருத்தை ஏற்றருள்க !'' என்று வேண்டா
  நிற்ப என்க.
 
(விளக்கம்) சந்து - சந்தி; எல்லை நீந்தி - கடந்து. ஒன்றிருகாவதம் என்றது
  சிறிதுதொலை என்றவாறு சிறிது தொலை சென்றால் அப்பால் நம் நாட்டிற்குச்
  செல்லும் வழி தெரியும். அது தெரியுமிடத்தே நந்துயர் குறையும் என்றான்
  என்க. 'யான் திகைப்பினால் இங்ஙனம் கூறுகின்றேன் என்று கருதற்க !' என்பான்
  திகைத்திலேன் என்றான். என்மனம் இனி ஆதலை மதிக்கும் என்க. ஆதல் -
  இனி ஆகவேண்டிய காரியம் என்க.