உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            வாளொடு கேடகம் வயந்தகற் கீத்துக்
           கோலொடுங் கொடுஞ்சிஙை கோமகன் கொண்டு
           பள்ளி கொண்ட வள்ளியஞ் சாயற்
     120    கற்பொடு புணர்வியைக் காஞ்சன மாலாய்
           நற்பொரு ளிதுவென நன்கன மெடுப்பி
           நடக்கல் வேண்டு நாமிவ ணீங்கி
           இடுக்க ணில்லா விடம்புகு மளவென
           உற்றவ னுரைத்த வுறுதி மாற்றம்
 
                   (உதயணன் செயல்)
              117 - 124: வாளொடு...........மாற்றம்
 
(பொழிப்புரை) அவ்வறிவுரை கேட்ட கோமகன் நன்றென மதித்துத் தன்
  கையிலிருந்த வாட்படையையும் கேடகத்தையும் அவ்வயந்தகனிடம்
  கொடுத்து அவன் பாலிருந்த அம்பையும் வளைந்த வில்லையுந் தான்
  ஏற்றுக்கொண்டு காஞ்சனமாலையை அணுகித் 'தோழீ! வயந்தகன்
  கூறுமிது நல்ல பொருளுடைத்து; ஆதலால் நாம் இப்பொழுது துயிலாநின்ற
  பூங்கொடி போலும் அழகிய சாயலையுடைய கற்புக்கடம் பூண்ட
  வாசவதத்தை நல்லாளை நன்கு எழுப்பிக்கொண்டு இவ்விடத்தினின்றும்
  நீங்கி இடையூறில்லாததோர் இடத்தை யடையுமளவும் எல்லோரும்
  நடத்தல் வேண்டும்!' என்று அவ்வுதயணவேந்தன் அறிவுறுத்த செய்தியை
  என்க.
 
(விளக்கம்) கோல் - அம்பு. சிலை - வில். கோமகன் : உதயணன்.
  கற்பொடுபுணர்வி: வாசவதத்தை கற்பினை ஓம்பும்பொருட்டுத் தன்னோடு
  உடன்போக் கொருப்பட்டு இவ்வல்லலையும் ஏற்றுக்கொண்டவள் என்று
  பாராட்டுவான் கற்பொடு புணர்ச்சி யென்றான். இது - வயந்தகன் கூறுமிது.
  இடுக்கணில்லாவிடம் - பிறர் அறியாமற் கரந்துறைதற் கேற்றவிடம்.