உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            கொடிப்படை கோமக னாகக் கூழை
           வடுத்தீர் வயந்தகன் வாள்வலம் பிடித்துக்
     140    கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக்
           காவல் கொண்ட கருத்தின னாகப்
           புரிசைச் சுற்றங் காஞ்சனை யாக
           உரிமைக் கொத்த திருமா மேனியைப்
           புன்புலர் விடியற் புறம்பனி யொழுகிய
     145    அம்புத லதர்வை யணிநடைக் கியலிய
           வனப்பொடு புணரிய வடகப் போர்வையை
           மணிப்பூண் வனமுலை யிடைக்கரை புதைஇப்
 
                     (இதுவுமது)
           138 - 147: கொடிப்படை..........புதைஇ
 
(பொழிப்புரை) இறை மகனாகிய உதயணகுமரன் கொடிப்படையாக
  முற்படச் செல்லாநிற்பவும், குற்றமற்ற வயந்தககுமரனே கூழைப் படையாக
  வாட்படையை வலக்கையிலே பற்றிக் கிடுகு என்னும் பொலிவுடைய
  படையையும் கைக்கொண்டு பாதுகாத்தலை விழிப்புடன் கருதும் கருத்தையுடை
  யனாய்ப் பின்னே வாராநிற்பவும், காஞ்சனமாலையே சுற்றுப்படையாகக்
  கோப்பெருந்தேவியாகுந் தகுதியுடைய வாசவதத்தையின் நாற்புறமும் ஏதமின்றிப்
  பார்த்துவாராநிற்பவும், அவ்வாசவதத்தை தானும் புல்லிதாகப் புலராநின்ற
  அவ்விடியற் காலத்தே மேலே பனிவீழப்பட்ட அழகிய புதலையுடைய
  அவ்வழியின்மேல் அழகாக நடத்தற்கேற்ப அழகோடு கூடிய தனது
  மேலாடையை மணியணிகலன் அணிந்த தன் முலைகளின் ஆடை விளிம்பிற்
  செருகிக்கொண்டு என்க.
 
(விளக்கம்) கொடிப்படை - முன்படை. கோமகன் : உதயணன். கூழை -
  பின்படை. கடித்தகம் - கிடுகுப்படை கடி - காவல்; தற்காப்பிற்கியன்ற படையென்னும்
  பொருளது என்க. முன்னரும் (34) வந்தது. யானையின் பின்புறத்தைப்
  பாதுகாக்கும் பொருட்டுக் கட்டப்பட்ட கிடுகு என அங்கு நினைக. காஞ்சனை
  திருமாமேனியைச் சுற்றிவரும் புரிசைச் சுற்றமாக எனக் கொள்க. பனிப் பெய்த
  வழியில் நன்கு நடத்தற்கு வாசவதத்தை தனது மேலாடையை நன்கு திருத்தி
  முலையோரத்தே செருகிக் கொண்டனள் என்பது கருத்து.