உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            அனித்த மிதிப்பினும் பனித்த லானா
           ஒளிச்செஞ் சீறடி யுருக்கரக் கேய்ப்ப
           உளித்தலை வெம்பர லூன்றுபு நலியப்
     165    பவளக் கொப்புளம் பக்கம் பயிலத்
           தவளைக் கிண்கிணி தாங்குத லாற்றா
           திவள திடுக்க ணிசைத்தும் யாமெனத்
           ததும்புகுரற் பூச லிரங்குவன வொலிப்ப
 
                  (இதுவுமது)
         162 - 168: அனித்தம்.........ஒலிப்ப
 
(பொழிப்புரை) வாசவதத்தையினது அனிச்சமலரை மிதிப்பினும் வருந்துதல்
  ஒழியாத ஒளியுடைய சிவந்த சிறிய அடிகள் உருக்கிய அரக்குப் போன்று
  வெப்பத்தாற் சிவவாநிற்பவும், உளி போன்ற கூர்மையுடைய நுனியையுடைய
  வெவ்விய பருக்கைக் கற்கள் அழுந்தி வருத்துதலானே பவளம் போன்ற
  கொப்புளங்கள் அவ்வடிகளின் கீழ்ப்பக்கத்தே மிகாநிற்பவும், தவளைவாய்
  கிண்கிணி இனி இவள் நடப்பாளாயின் இவளது துன்பம் தாங்குதற்கரியதாகும்
  என்று இரங்கி யாமே உதயணகுமரனுக்கு எடுத்துக் கூறுவேம் ! என்று
  முரலாநின்ற தமது குரலாலே இரங்கிக் கூறுவனபோன்று ஒலியாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) அனித்தம் - அனிச்சமலர். 'அனிச்சமும் அன்னத்தின் தூவியும்
  மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்' என்றார் வள்ளுவனாரும் (குற - 1120) உருக்கிய
  அரக்குப் போலச் சிவக்க என்க. பரல் - பருக்கைக் கற்கள். பவளம் போன்ற
  கொப்புளம் என்க. பயில - மிகாநிற்ப. ''உதயணனுக்கு இவள் இசையாள், யாம்
  இசைத்தும்' என்று இரங்கிக் கூறுவன போன்று ஒலிப்ப என்க. கிண்கிணி ஒலிப்ப
  என்க..