உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            கார்ப்பூ நீலங் கவினிய கலித்துறை
           நீர்ப்பூம் பொய்கை நெறியிற் கண்டதன்
           படுகரை மருங்கிற் படர்புறம் வளைஇக்
     175    கன்முரம் படுத்துக் கவடுகா றாழ்ந்து
           புள்ளினம் புகலினும் புகற்கரி தாகி
           ஒள்ளெரி யெழுந்த வூழ்படு கொழுமலர்
           முள்ளரை யிலவத்துண் முழையரண் முன்னி
 
                (வயந்தகன் செயல்)
             172 - 178: கார்ப்பூ..........முன்னி
 
(பொழிப்புரை) அது கேட்டவயந்தகன் விரைந்து சென்று கரியகுவளை
  மலர்ந்து அழகுற்ற பறவைகளின் ஆரவாரமுடைய துறையினையுடைய
  நீர்மிக்கதோர் அழகிய பொய்கையினை வழியிலே கண்டு அப்பொய்கையின்
  பெரிய கரையின் பக்கத்தேயுள்ள கற்களையுடைய மேட்டின்கண் நின்று
  படர்ந்து பக்க நிலத்தைப் பெரிதும் தன்னுள் வளைத்துக் கொண்டு கிளைகள்
  அடிமரங்காறும் தாழப்பட்டுப் பறவைகள் நுழைவதற்கு முயலினும் புகுதற்கரிய
  செறிவுடையதாய், ஒள்ளிய தீக்கொழுந்து எழுந்தாற் போன்று மலர்ந்த கொழுவிய
  மலரையும் முட்கள் அமைந்த அடிப்பகுதியையும் உடையதோர் இலவ மரத்தின்
  கீழே முழை போன்றிருந்த பாதுகாப்பிடத்தையும் கண்டு அவ்விடத்தே சென்று
  என்க.
 
(விளக்கம்) நீலம் - கருங்குவளை. கவினிய - அழகுற்ற. கலி - முழக்கம்.
  நெறி - தான் சென்ற வழி. கன்முரம்பு - கற்களையுடைய மேடு. கவடு -
  கிளை. கால் - அடிப்பகுதி. ஊழ்படுதல் - மலர்தல். இலவம் - இலவமரம்.