உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            முள்ளங் கோடு மூழிலைப் பிறங்கலும்
     180    வள்ளிலை வாடலும் வயந்தகன் களைந்து
           பாய லமைத்த பாசடைப் பள்ளியுள்
           ஆய்வளைத் தோளியை யமர்துயில் கொளீஇத்
           தடம்பெரும் பொய்கை தண்ணிழல் வலியா
           ஒடுங்கினர் மாதோ கடும்பகல் கரந்தென.
 
                  (இதுவுமது)
           179 - 184: முள்..........கரந்தென்
 
(பொழிப்புரை) அம்முழையிடத்தே புகுந்துறைதற்குத் தகுதியாக
  முள்ளையுடைய அவ்விலவின் வளார்களையும் உதிர்ந்த சருகுக்
  குவியலையும் பெரிய இலைகளையும் வாடிய மலர்களையும்
  அவ்வயந்தகன் அம் முழையினின்றும் அகற்றித் தூய்மை செய்து
  பசிய இலைகளைப் பரப்பி மெத்தென்ற படுக்கையும் அமைத்தனனாக;
  பின்னர் உதயணன் முதலியோர் அந்த இலைப்படுக்கையின்கண்
  அழகிய வளையல் அணிந்த தோள்களையுடைய வாசவதத்தை
  விரும்புந் துயிலை மேற்கொள்ளும்படி செய்து மிகவும் பெரிய அப்
  பொய்கையும் அவ்விலவ மரத்தின் குளிர்ந்த நிழலுமே தமக்கு ஆதாரமாகக்
  கொண்டு அந்தக் கொடிய பகற் பொழுதிலே அம்முழையின்கண் தம்மைப்
  பிறர் அறியாதபடி மறைந்துறைவாராயினர் என்க.
 
(விளக்கம்) முள்ளங்கோடு - முள்ளையுடைய வளார். ஊழிலை - உதிர்ந்த
  சருகு. வள்ளிலை - பெரிய இலை. வாடல் வாடியுதிர்ந்த மலர்; இலையும்
  வாடலும் என்க அடைப்பள்ளி - இலையாலாய படுக்கை. வளைத்தோளி:
  வாசவதத்தை அமர்துயில்: வினைத்தொகை. பொய்கையும் நிழலும் தமக்கு
  வலியாக என்க.

                  53. பிடி வீழ்ந்தது முற்றிற்று.