உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           கேள்வித்துறை போகி வேள்வி முற்றிய
          அந்த ணாளர் தந்தொழி றொடங்கப்
          பால்வெண் குருகின் பன்மயிர்ச் சேவல்
     15    பூம்பொறிப் பெடையைப் புலவி யுணர்த்திப்
          பொறிப்பூம் பள்ளி புகாஅ தயல
          மதிதோய் மாடத்து மழலையம் புறவொடு
          வெள்ளிவெண் மாடத்துப் பள்ளி கொள்ளும்
          பசும்பொ னகரமர் விசும்புபூத் ததுபோல்
     20   செழுஞ்சுடர் விளங்குஞ் சிறுபுன் மாலை
 
                   (இதுவுமது)
          12 - 20 : கேள்வி..........புன்மாலை
 
(பொழிப்புரை) நூற் கேள்வித்துறை முடியுந்துணையுஞ் சென்று முதிர்ந்து வேள்வித்தொழிலும் செய்துமுற்றிய அந்தணர்கள் தமது மாலைக்கடனைத் தொடங்காநிற்பவும், பால்போலும் வெண்மையுடைய அன்னப் பறவையினத்துப் பலவாகிய மயிரையுடைய சேவலன்னம் அழகிய புள்ளிகளையுடைய தம் பெடையன்னங்களை ஊடலுணர்த்திப் புள்ளிகளையுடைய மலராகிய தம் படுக்கைகளிற் புகாமல், அயலிலுள்ளனவாகிய திங்களைத் தீண்டும் மாடங்களிலே சென்று ஆங்குறையாநின்ற இனிய குரலையுடைய அழகிய புறவுகளோடே வெள்ளியாலின்ற மாடப்புரைகளிலே துயிலா நிற்பவும், பசிய பொன் மயமான அமராவதி நகரம் அமையப்பெற்ற வானம் மீனினங்களைப் பூத்தாற் போன்று செழுமையுடைய சுடர்விளக்குகள் விளங்குதற் கிடமாவனவும் ஆகிய இத்தகைய சிறிய புல்லிய அந்திமாலைப் பொழுதுகளிலே என்க.
 
(விளக்கம்) இற்றை நாள் வன்பாலையில் இலவின்கீழ்க் கரந்துறையும் வாசவதத்தை பண்டு நிகழ்ந்த மாலைப்பொழுதுகளிலே எய்திய இன்பத்தை ஆசிரியர் ஈண்டு நினைவூட்டி நம் அவலக் சுவையைக் மிகச் செய்கின்றார்.

    கேள்வி - நூற் கேள்வி. தந்தொழில் என்றது இறை வணக்கம் முதலிய மாலைக் கடனை. பூம்பள்ளி - மலர்ப் படுக்கை. மழலை - இனிமை. புறவு - புறா. வெள்ளி வெண்மாடம் என்றது மாடப் புரைகளை பள்ளி கொள்ளும் மாலை, சுடர் விளங்கும் மாலை எனத் தனித்தனி கூட்டுக. பசும் பொனகர் என்றது அமராவதியை. விசும்பு என்பதன் ஈறு தொக்கது. விசும்பு பூத்ததுபோல் எனத் திருத்திக் கோடலுமாம்.